ஆசிய விளையாட்டு – முதல்முறையாக தங்கம் வென்று அசத்தியது இந்திய மகளிர் அணி!

indian womens team

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கிய 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் அக்.8 வரை நடைபெறுகிறது. கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து, படகுபந்தயம் உள்ளிட்ட சில போட்டிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.

ஆசிய விளையாட்டு தொடரில் நேற்று மகளிருக்கான கிரிக்கெட்டில் முதல் அரையிறுதிப் போட்டி நடந்தது. இதில், இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில், இலங்கை வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று இறுதி போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.

அதன்படி, ஆசிய விளையாட்டு போட்டிக்கான மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டி இன்று பிங்ஃபெங் கேம்பஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.  அதன்படி, முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்து.

இதில், ஸ்மிருதி மந்தனா 46 ரன்களும், ஜெமீமா ரோட்ரிக்ஸ் 42 ரன்களும் குவித்தனர். இலங்கை அணி சார்பாக பிரபோதனி, சுகந்திகா குமாரி, ரணவீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.  இதன்பின், 117 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள், இந்திய மகளிர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இறுதியாக இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலமாக இந்திய மகளிர் அணி முதல் முறையாக ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளது. இந்திய மகளிர் அணி சார்பில் டைட்டாஸ் சாது 3 விக்கெட்டுகள், ராஜேஸ்வரி கயக்வாட் 2 விக்கெட்டுகள் எடுத்து அணிக்கு உதவினர். இதன்மூலம், ஆசிய விளையாட்டு போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களுடன் இந்தியா இதுவரை 11 பதக்கங்கள் வென்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்