“விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர்.., கூட்டணி குறித்து பேசவில்லை” – தவெக அருண்ராஜ்.!
தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளராக இருப்பார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

சென்னை : அதிமுக கூட்டணிக்கு தவெக வர வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பிற்கு, தவெக கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், ”எங்களுடைய முதல்வர் வேட்பாளர் எங்கள் தலைவர் விஜய்தான் என்பதைச் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டோம். எங்கள் கூட்டணியில் யாரைச் சேர்பது, தவிர்ப்பது என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம். டிசம்பருக்கு பிறகுதான் அதுகுறித்து முடிவு எடுப்போம்.
எடப்பாடி பழனிச்சாமி குழப்பமான மனநிலையில் உள்ளார். தங்களுடைய கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே தன்னை பெரும் தலைவர், நல்ல கூட்டணியை உருவாக்கிவிடுவேன் என்ற தோற்றத்தை கட்டமைக்க இது போல் தவறான கருத்தைக் கூறி வருகிறார்.
அதிமுக – பாஜக கூட்டணி மக்கள் மத்தியில் எடுபடாது என்பதாலேயே பிரமாண்ட கட்சி எங்கள் கூட்டணிக்கு வர உள்ளது என்று கூறுகிறார். இதுவரை யாரிடமும் நாங்கள் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்தவில்லை. எங்கள் முதல்வர் வேட்பாளர் விஜய்தான். இது தொடர்பான முடிவுகள் டிசம்பர் 2025க்குப் பிறகு எடுக்கப்படும்” என்றும் அருண்ராஜ் தெளிவுபடுத்தியுள்ளார்.