டெல்லி : வியட்நாத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வின்பாஸ்ட் (Vinfast) நிறுவனம், இந்திய சந்தையில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடர்ந்து அதிரடியான திட்டங்களை தொடர்ச்சியாக கொண்டு வருகிறது. ஏற்கனவே சில எலக்ட்ரிக் பைக்குகளின் டிசைன்களைப் பதிவு செய்திருந்த அந்நிறுவனம், தற்போது தான் புதிதாக உருவாக்கியுள்ள 'ராசாட்' (Rasad) என்னும் பிரம்மாண்டமான மேக்ஸி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வடிவமைப்பு உரிமையைப் பதிவு செய்துள்ளது.
இதுவரை பெட்ரோல் வண்டிகளில் மட்டுமே பார்த்து வந்த இந்த வகை பெரிய ஸ்கூட்டர்கள், இப்போது எலக்ட்ரிக்கிலும் அறிமுகமாகவுள்ளது பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எப்போது வெளிவரும்?
வெளிநாடுகளில் இருந்து வண்டிகளின் பாகங்களைக் கொண்டு வந்து இந்தியாவில் அசம்பிள் செய்யும் முறையிலும், பின்னர் தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி (Thoothukudi) தொழிற்சாலையில் முழுமையாகத் தயாரிக்கவும் வின்பாஸ்ட் திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தூத்துக்குடி சிப்காட் (SIPCOT) பகுதியில் சுமார் 200 ஹெக்டேர் நிலத்தை இந்நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த 'ராசாட்' எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த ஆண்டு (2026) கடைசியில் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. உலக வெளியீட்டிற்கு முன்பே இந்தியாவில் இதன் டிசைன் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த ஆண்டிற்குள்ளேயே இந்திய மார்க்கெட்டிலும் இது விற்பனைக்கு வந்துவிடும் என்று உறுதியாக நம்பலாம்.
விலை எவ்வளவு இருக்கும்?
இதுவொரு சாதாரண ஸ்கூட்டர் போல இல்லாமல், பார்க்க மிகவும் பெரியதாகவும் பிரீமியம் வசதிகளுடனும் வருவதால், இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 1.20 லட்சம் முதல் ரூ. 1.5 லட்சம் வரை இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைலேஜ் மற்றும் பேட்டரி ரேஞ்ச் எப்படி?
இது எலக்ட்ரிக் வாகனம் என்பதால் பெட்ரோல் மைலேஜ் கணக்கு கிடையாது; மாறுகாக ஒருமுறை சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் ஓடும் (Range) என்ற விவரம் இதோ:
- இந்த ஸ்கூட்டரின் முழுமையான மைலேஜ் மற்றும் பேட்டரி அளவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
- இருப்பினும், வண்டியின் நடுப்பகுதியில் பொருத்தப்பட உள்ள சக்திவாய்ந்த 7.1 kW எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் இது இயக்கப்படும் என்று தெரிகிறது.
- வியட்நாம் ஊடகங்களின் தகவல்படி, இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
சிறப்பு அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு
மிரட்டலான தோற்றம்: வண்டியின் முன்பகுதியில் பெரிய ஹெட்லைட், பெரிய சைஸ் விண்ட்ஸ்கிரீன் (Windscreen) மற்றும் ஸ்டைலான லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் வண்டி ஓட்டும் போது காற்று நேராக நம் முகத்தில் அடிக்காது, நீண்ட தூரப் பயணம் மிகவும் சுகமாக இருக்கும்.
கெத்தான சக்கரங்கள் மற்றும் பிரேக்: யமஹா ஏராக்ஸ் (Yamaha Aerox) போன்ற ஸ்டைலான ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர்களைப் போலவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 14 இன்ச் பெரிய சக்கரங்கள் மற்றும் வண்டியின் முன்பக்கமும் பின்பக்கமும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளதால் பிரேக் பிடித்தவுடன் வண்டி நச்சுனு நிற்கும்.
ஸ்மார்ட் வசதிகள்: உங்கள் மொபைல் போனை வண்டியுடன் புளூடூத் மூலம் இணைத்துக் கொள்ளலாம். வழி தெரியாத இடங்களுக்குச் செல்ல டிஜிட்டல் திரியிலேயே வழி காட்டும் (Navigation) வசதியும் இதில் உண்டு.
வசதியான இருக்கை: ஓட்டுநரும் பின்னால் உட்காருபவரும் எந்தவித முதுகுவலியும் இல்லாமல் ஜாலியாகப் பயணம் செய்ய ஏதுவாக, மிகவும் மெத்தையான மற்றும் அகலமான இருக்கை (Stepped seat) கொடுக்கப்பட்டுள்ளது. வழுக்கும் சாலைகளிலும் வண்டி நழுவாமல் இருக்க அகலமான பின் டயரும் இதில் இடம்பெற்றுள்ளது.
