டெல்லி : இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் பெட்ரோல் திறன், மலிவான விலை மற்றும் தினசரி பயன்பாட்டு வசதி ஆகியவற்றின் காரணமாக டிவிஎஸ் ஸ்போர்ட் (TVS Sport) மற்றும் ஹோண்டா ஷைன் (Honda Shine) ஆகிய பைக்குகள் முக்கிய இடத்தில உள்ளது . எத்தனை ஸ்டைலிஷ் அல்லது பெர்ஃபாமன்ஸ் பைக்குகள் அறிமுகமானாலும், நடுத்தர மக்களின் முதல் தேர்வாக கம்யூட்டர் பைக்குகளே எப்போதும் இருக்கும் என்று டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் குறிப்பிடுகிறது.
இந்த இரண்டு பைக்கிலுமே எந்த பைக்கை வாங்கலாம் என்கிற குழப்பம் பலருக்கும் உண்டு. அந்த வகையில், இரண்டு பைக்குகளின் விலை மற்றும் மைலேஜ் விவரங்களை ஒப்பிட்டு பார்த்து உங்களுக்கு பிடித்தமான பைக்கை வாங்கிக்கொள்ளுங்கள்.
விலை மற்றும் வேரியன்ட்கள் ஒப்பீடு
பைக் வாங்குவதில் விலை நிர்ணயம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் இந்த இரண்டு தினசரி கம்யூட்டர் பைக்குகளும் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கானது இந்திய எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் தோராயமாக ரூ. 58,750 முதல் ரூ. 59,950 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இது ஸ்போர்ட் செல்ஃப் ஸ்டார்ட் (ES) அலாய் வீல் மற்றும் ஸ்போர்ட் செல்ஃப் ஸ்டார்ட் (ES) பிளஸ் ஆகிய இரண்டு வகைகளில் (Variants) கிடைக்கிறது. மறுபுறம், ஹோண்டா ஷைன் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 81,502 முதல் ரூ. 86,862 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஹோண்டா பைக் டிரம், டிஸ்க் மற்றும் லிமிடெட் எடிஷன் என மூன்று வெவ்வேறு வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது.
இன்ஜின் மற்றும் செயல்திறன்
செயல்திறன் அடிப்படையில் இரண்டு பைக்குகளும் வெவ்வேறு எஞ்ஜின் வகைகளைக் கொண்டுள்ளன. டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கில் 109.7சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8.7 என்எம் டார்க் திறனை 4500 ஆர்பிஎம்-ல் வெளிப்படுத்தும் திறன் கொண்டதுடன், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கி.மீ ஆகும்.
மறுபுறம், ஹோண்டா ஷைனில் சற்று பலம் வாய்ந்த 123.94சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 6000 ஆர்பிஎம்-ல் 11 என்எம் டார்க் திறனை உருவாக்குகிறது. மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 102 கி.மீ வரை செல்லக்கூடியது. இரண்டு பைக்குகளின் வீல்பேஸ், கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் எடையில் சிறிய அளவிலான வேறுபாடுகள் காணப்பட்டாலும், இரண்டும் நகரப் பயணங்களுக்கு மிகவும் உகந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
மைலேஜ்
தினசரி பயணம் செய்வோருக்கு மைலேஜ் மற்றும் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு மிகவும் இன்றியமையாத பகுதியாகும். இது நேரடியாக மாதாந்திர பெட்ரோல் செலவைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. டிவிஎஸ் ஸ்போர்ட் அதன் எஃப்சிடிஐ (ETFI) தொழில்நுட்பத்தின் மூலம் சிறப்பான எரிபொருள் திறனை வழங்குவதற்காக உலகளவில் அறியப்படுகிறது.
இப்பைக் லிட்டருக்கு அசத்தலாக 80 கி.மீ மைலேஜ் தரும் திறன் கொண்டது. இதன் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 10 லிட்டர் ஆகும். அதே நேரத்தில், ஹோண்டா ஷைன் பைக்கானது லிட்டருக்கு தோராயமாக 55 கி.மீ மைலேஜ் வழங்குகிறது. இருப்பினும் இதன் எரிபொருள் டேங்க் கொள்ளளவு 10.5 லிட்டராக இருப்பதால், நீண்ட தூரப் பயணங்களுக்கு சற்று கூடுதல் வசதியை அளிக்கிறது.
என்னென்ன அம்சங்கள் இருக்கு?
நவீன அம்சங்களைப் பொறுத்தவரை, டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கில் அனலாக் கன்சோல், ஹாலஜன் ஹெட்லேம்ப், பகல்நேர விளக்குகள் (DRLs), குறைந்த எரிபொருள் காட்டி மற்றும் உயர் பீம் காட்டி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இதிலுள்ள ETFI தொழில்நுட்பம் கூடுதலாக 15 சதவிகித மைலேஜை வழங்க உதவுகிறது.
மறுபுறம், ஹோண்டா ஷைனில் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், எக்கோ இண்டிகேட்டர், சைடு ஸ்டாண்ட் அலாரம் மற்றும் ஏசிஜி (ACG) உடன் கூடிய சைலண்ட் ஸ்டார்ட் போன்ற நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. இரண்டு பைக்குகளிலும் ஓட்டுநரின் பாதுகாப்பிற்குத் தேவையான அம்சங்கள் உரிய முறையில் வழங்கப்பட்டுள்ளன.
எந்த பைக்கைத் தேர்ந்தெடுக்கலாம்?
உங்கள் வரவு-செலவுத் திட்டம் (Budget), தினசரி பயணத் தூரம் மற்றும் ஓட்டும் பாணியைப் பொறுத்து சரியான பைக்கைத் தேர்ந்தெடுக்கலாம். உங்களுடைய முதன்மையான நோக்கம் அதிகப்படியான மைலேஜ் பெறுவதாகவும், குறைந்த செலவில் இலகுவான எடையுள்ள மோட்டார்சைக்கிளை நகரத்திற்குள் ஓட்டுவதாகவும் இருந்தால், நீங்கள் தாராளமாக டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கைத் தேர்ந்தெடுக்கலாம்.
மாறாக, உங்களுக்குச் வலுவான இன்ஜின் செயல்திறன் தேவைப்பட்டாலும், நெடுஞ்சாலைப் பயணங்கள் அதிகம் இருந்தாலும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களுக்கான (Pillion) கூடுதல் வசதி மற்றும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வலுவான பைக் வேண்டுமென்றால், ஹோண்டா ஷைன் உங்களுக்கு மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.
