“நான் பண்ணல ஆள விடுங்க”..கவின் படத்திலிருந்து விலகிய அனிருத்!
கவின் நடித்து வரும் கிஸ் படத்தில் இருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : இசையமைப்பாளர் அனிருத் பொறுத்தவரையில் பெரிய பெரிய படங்களுக்கு தான் இசையமைத்துக்கொண்டு வருகிறார். அவர் இப்போது உச்சத்தில் இருப்பதன் காரணமாக ஒரு படத்திற்கு 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ச்சியாக ஹிட் பாடல்களை கொடுத்து வருவதன் காரணமாக அவருக்கு பெரிய பெரிய படங்களில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
குறிப்பாக, அவர் தற்போது ஜனநாயகன், ஜெயிலர் 2, கூலி, s23, ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த பிஸியான சூழலில் தான் அனிருத் இயக்குநர் நெல்சன் நடிகர் கவினை வைத்து தயாரிக்கும் கிஸ் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகினார். எனவே, முதல் முறையாக கவின் அனிருத் கூட்டணி இந்த படத்தின் மூலம் இணையவிருந்த காரணத்தால் படத்தின் பாடல்கள் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது.
ஆனால், அப்படி எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக படத்திலிருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அவருக்கு பதிலாக கிஸ் படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் படத்திற்குள் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஜென் மார்ட்டின் கவின் நடித்த டாடா படத்திற்கு இசையமைத்திருந்தார்.
அனிருத் விலகிய காரணம்?
இந்த படத்திலிருந்து அனிருத் விலகியதற்கு சில காரணங்கள் இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. அதில் முதல் காரணமாக அனிருத் ஒரு படத்திற்கு 10 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். ஆனால், கிஸ் படத்தின் பட்ஜெட் அதைவிட குறைவாக தான் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, சம்பள பிரச்சினை காரணமாக அவர் வெளியேறிஇருக்கலாம் என கூறப்படுகிறது. மற்றொரு தகவல் என்னவென்றால், அனிருத் தற்போது முன்னதாக கமிட்டான பெரிய படங்களுக்கு இசையமைத்து வருவதால் விலகி இருக்கலாம் எனவும் தகவல்கள் பரவி வருகிறது.