புதிய கொடி... வீட்டின் முன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள்... தனுஷின் அடுத்த இலக்கு அரசியலா?

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.

Hero Image

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தனது 43-வது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். வீட்டின் வெளியே வந்த தனுஷைப் பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

புதிய கொடி மற்றும் அரசியல் வருகை எதிர்பார்ப்பு

சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் மன்ற விழாவில், வெள்ளை மற்றும் சிகப்பு நிறங்களுக்கு இடையே நட்சத்திரக் குறியும், அதன் நடுவே தனது உருவப்படமும் பொறிக்கப்பட்ட புதிய கொடியை தனுஷ் அறிமுகப்படுத்தியிருந்தார். அப்போது அவர், "நமக்கு இருக்கும் இந்த ஒற்றுமையையும் பலத்தையும் சமூகத்திற்குப் பயன்படும் வகையில் மாற்ற வேண்டும்" என்று பேசியது, அவர் விரைவில் அரசியல் ஆடுகளத்தில் களமிறங்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சியில் தனுஷ் பேசியது என்ன?

"இது என்ன திடீர்னு கூடுன கூட்டமா? 2002-ல் ஒரு ஒல்லி குச்சிப் பையனை உங்கள்ல ஒருத்தனா ஏத்துக்கிட்டு என்னை தூக்கித் தாங்கி, வழித்துணையா நின்ன தூண்கள். இது கூட்டம் இல்ல, என் குடும்பம், என் அசுர குடும்பம்."நம் பசங்க இன்டர்நெட்டில் வதந்திகளைப் பரப்பிக்கிட்டும், நெகட்டிவிட்டியைப் பரப்பிக்கிட்டும் இருக்கிறவங்க கிடையாது. களத்துல இறங்கி நிக்கிறவங்க, அன்பைப் பகிர்ந்துக்கிறவங்க." என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தனது சிறுவயதில் பிறந்தநாளைக் கொண்டாடிய விதம் குறித்துப் பகிர்ந்து கொண்டார். "நான் 3, 4-வது படிக்கிற வரைக்கும் என் பர்த்டே எப்போன்னே எனக்குத் தெரியாது. ஸ்கூல்ல கலர் டிரஸ் போட்டுக்கிட்டு சாக்லேட் கொடுக்கிறவங்களைப் பார்க்கும்போது எனக்கும் அந்த ஆசை வந்தது. அப்புறம் என் அக்கா என் அம்மா, அப்பாகிட்ட பேசி ஜூலை 28 தான் என் பிறந்தநாள்னு சொல்லி எனக்கு ஒரு கலர் டிரஸ் எடுத்துக்கொடுத்தாங்க. அந்தச் சந்தோஷத்தை என்னால மறக்கவே முடியாது." எனவும் தெரிவித்தார்.

மேலும், "இன்னைக்கு என் பர்த்டேவை நீங்க எல்லாரும் சேர்ந்து இவ்வளவு பெருசா கொண்டாடுறீங்க. உங்க பர்த்டே அன்னைக்கு கூட உங்க முகத்துல இவ்வளவு சந்தோஷம் இருக்குமான்னு தெரியல. நான் என்ன புண்ணியம் பண்ணியிருக்கேன்... இத்தனை ஆயிரம் பேர் கூடி ரத்தம் கொடுத்திருக்கீங்க. உங்களை நினைச்சு நான் ரொம்பப் பெருமைப்படுறேன். My rowdy babies, I love you, I am so proud of you" என்று கூறி தனது ரசிகர்களுக்கு அன்பையும் நன்றியையும் தெரிவித்தார்.