இந்தியாவையே தெறிக்கவிட்ட Spider-Man... முதல் நாளே ரூ.72 கோடி வசூல்!

Spider-Man: Brand New Day திரைப்படம் இந்தியாவில் முதல் நாளிலேயே ரூ.72 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய பாக்ஸ் ஆபீஸ் சாதனை படைத்துள்ளது.

Hero Image

டெல்லி : உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஸ்பைடர்மேன் வரிசையின் புதிய திரைப்படம் (Spider-Man: Brand New Day) , இந்தியத் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாகப் பிரம்மாண்டமான ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ள இத்திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் பல பழைய சாதனைகளைத் தகர்த்தெறிந்து வருகிறது.

அவெஞ்சர்ஸ் கோட்டையைத் தகர்த்த ஸ்பைடர்மேன்

இந்தியாவில் இதுவரை வெளியான ஹாலிவுட் திரைப்படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திகழ்ந்தது. பல ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த அந்தப் பிரம்மாண்ட சாதனையை, இந்த புதிய ஸ்பைடர்மேன் திரைப்படம் தற்போது அசால்ட்டாக முறியடித்துள்ளது. இந்தியாவில் ரிலீஸான முதல் நாளிலேயே ஒட்டுமொத்தமாக. ரூ.72 கோடிக்கும் மேல் வசூலித்து, இந்திய பாக்ஸ் ஆபீஸின் புதிய சுல்தானாக ஸ்பைடர்மேன் உருவெடுத்துள்ளார். இதன் நிகர வசூல் மட்டும் சுமார் ரூ.60 கோடியைத் தாண்டியுள்ளது.

தமிழகத்தில் எத்தனை கோடி?

இந்திய அளவில் மட்டுமன்றி, தமிழகத்திலும் ஸ்பைடர்மேன் படத்திற்கான வரவேற்பு அலை அலையென எழும்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள மல்டிபிளக்ஸ் மற்றும் ஒற்றைத்திரை திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் ரூ.5.10 கோடிக்கும் மேல் பிரம்மாண்டமாக வசூல் குவிந்துள்ளது. வார இறுதி நாட்கள் என்பதால் சென்னை, கோவை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் அடுத்தடுத்த காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்து வருகின்றன.

முன்னணி நட்சத்திரங்களின் சிறப்பான நடிப்பு, வியக்க வைக்கும் அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் கண்கவர் கிராபிக்ஸ் ஆகியவை ரசிகர்களைத் திரையரங்கிற்கு இழுத்து வருகின்றன. இந்த அதீத வரவேற்பைப் பார்க்கும்போது, வரும் நாட்களிலும் இத்திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபீஸில் பல புதிய வரலாற்றுச் சாதனைகளைப் படைக்கும் எனத் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.