டெல்லி : சமீபத்தில் இந்தியாவில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) என்ற டிஜிட்டல் இயக்கம் நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தைக் கையில் எடுத்து மத்திய அரசை உலுக்கியதுடன், அப்போதைய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவுக்கும் முக்கியக் காரணமாக அமைந்தது. இந்நிலையில், தற்போது பெட்ரோலில் எத்தனுடன் கலப்பு (E20 Fuel Policy) தொடர்பான விவகாரத்தை முன்வைத்து சமூக வலைதளங்களில் 'ஈ20 ஜனதா கட்சி' (E20 Janta Party) என்ற புதிய அமைப்பு தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
ஈ20 ஜனதா கட்சி என்றால் என்ன?
இது முறையான பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியோ அல்லது அதிகாரப்பூர்வ அமைப்போ அல்ல. மாறாக, சமூக வலைதளங்களில் உருவாகியுள்ள ஒரு டிஜிட்டல் மக்கள் குரல் இயக்கம் (Citizen Campaign) ஆகும். எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் இந்த இயக்கம், வாகன ஓட்டிகள் மற்றும் நுகர்வோரின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறது.
அரசாங்கம் E20 (20% எத்தனால் கலக்கப்பட்ட) பெட்ரோலை ஊக்குவிப்பதில் தங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்றாலும், சுத்தமான எரிபொருளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நுகர்வோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே இவர்களின் வாதமாகும்.
இந்த இயக்கத்தின் பின்னணியில் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளோ அல்லது தலைவர்களோ இருப்பதாக எந்தத் தகவலும் இல்லை. இது முழுமையான ஒரு சுயேச்சையான குடிமக்கள் மன்றமாகவே செயல்பட்டு வருகிறது. பொதுமக்களின் அன்றாட வாழ்வியலோடு தொடர்புடைய எரிபொருள் சிக்கல்கள், வெளிப்படைத்தன்மை மற்றும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதே தங்களது பிரதான நோக்கம் என்று இந்த அமைப்பின் சமூக வலைதளப் பக்கங்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஈ20 ஜனதா கட்சியின் முக்கியக் கோரிக்கைகள்
தூய பெட்ரோல் : நாட்டின் அனைத்துப் பெட்ரோல் நிலையங்களிலும் E20 பெட்ரோலுடன் சேர்த்து, 100% தூய்மையான (எத்தனால் கலக்கப்படாத) பெட்ரோலும் விற்பனைக்குக் கிடைக்க வேண்டும்.
வாகன உற்பத்தியாளர்களின் வழிகாட்டுதல்: வாகனங்களின் இன்ஜின் ஆயுளைப் பாதுகாக்கும் வகையில், அந்தந்த வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் பரிந்துரைக்கும் பரிந்துரைக்கப்பட்ட எரிபொருளையே நுகர்வோர் எளிதில் பெற வழிவகை செய்ய வேண்டும்.
எதிர்ப்பு: வாகன ஓட்டிகளின் வாகனங்களைச் சோதனைக் கூடங்களாகப் பயன்படுத்தி, புதிய எரிபொருள் முறைகளை அவர்களின் அனுமதி இல்லாமல் கட்டாயமாகத் திணிக்கக் கூடாது.
நுகர்வோர் சுதந்திரம்: எந்த வகையான எரிபொருளைப் பயன்படுத்துவது என்பதைத் தீர்மானிக்கும் முழுச் சுதந்திரமும் வாகன உரிமையாளர்களின் கைகளிலேயே இருக்க வேண்டும்.
பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு
நடுத்தர வர்க்கத்தினரின் கடின உழைப்பால் வாங்கிய வாகனங்கள் மீதான தேவையற்ற பரிசோதனைகள் மற்றும் அதனால் இன்ஜினில் ஏற்படும் பழுதுகள் குறித்து சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வரும் கேள்விகளுக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. சில நாட்களுக்கு முன்புவரை சில ஆயிரங்களில் இருந்த இந்த அமைப்பின் பின்தொடர்பாளர்களின் (Followers) எண்ணிக்கை, தற்போது லட்சக்கணக்கில் தாண்டி மிக வேகமாக உயர்ந்து வருகிறது.
மீம்கள் மற்றும் நையாண்டித் பதிவுகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திய 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) எவ்வாறு மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியதோ, அதேபோன்று இந்த 'ஈ20 ஜனதா கட்சி'யும் வாகன ஓட்டிகளின் எரிபொருள் தொடர்பான நியாயமான கோரிக்கைகளைத் தேசிய அளவில் பேசுபொருளாக மாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
