மகாராஷ்டிரா : மாநிலம் அமராவதி மாவட்ட அரசு மகளிர் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு (NICU) அமைந்துள்ள பகுதியில் திடீரென ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் மூன்று பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்கு வெளியே தங்களது குழந்தைகளின் உடல்நிலை குணமடைவதற்காகக் காத்திருந்த பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நள்ளிரவு நேரத்தில் அரங்கேறியுள்ளது.
திங்கட்கிழமை அதிகாலை சுமார் 3.15 மணியளவில் குறைமாதக் குழந்தைகள், குறைந்த எடையுள்ள மற்றும் தீவிர உடல்நலக் குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்டவுடன் வார்டு முழுவதும் புகைமூட்டம் பரவியதுடன், சில பச்சிளம் குழந்தைகள் கரும்புகையாலும் சாம்பலாலும் மூடப்பட்டிருந்ததாகக் அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அவசரச் சூழலில், பாதுகாப்புப் பணியாளர்களும் செவிலியர்களும் உடனடியாக உள்ளே ஓடிவந்து புகைக்கு நடுவே சிக்கிய குழந்தைகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அச்சமயத்தில் மருத்துவமனையின் வெளியே உறங்கிக் கொண்டிருந்த அச்சல்பூரைச் சேர்ந்த யோகேஷ் சவர்க்கார் என்பவரின் மனைவி மற்றும் எட்டாம் நாள் பச்சிளம் குழந்தையும் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். திடீரென தீ பரவியதைக் கண்ட அவர், உடனடியாக முதல் தளத்திற்கு ஓடிச் சென்று தனது குழந்தையைக் காப்பாற்றி கீழே பாதுகாப்பாக அழைத்து வந்தார். இருப்பினும், வார்டில் இருந்த மற்ற சில குழந்தைகளின் மீது கரும்புகைபடிந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த விபத்துக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே முழுக்காரணம் என்று பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டவுடன் உடனடியாகச் செயல்பட வேண்டிய நீர் தெளிப்பான் அமைப்பு (water spray system) உரிய நேரத்தில் வேலை செய்யவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். விபத்துக்கான துல்லியமான காரணம் இனிதான் தெரியவர வேண்டும் என்றாலும், பச்சிளம் குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தும் உயிரிழப்பும் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
