குஜராத் : மாநிலத்தில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் தண்ணீர் திடீரென அலைபோல அசையும் விசித்திர நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மத்தியில் குழப்பமும் அச்சமும் ஏற்பட்டதை அடுத்து, மாவட்ட ஆட்சியர் நிலத்தடி நீர் ஆராய்ச்சிக்குழுவிடம் இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள விர்பர்தா கிராமத்தில் அமைந்துள்ளது இந்த 18 அடி ஆழ கிணறு. கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழைக்குப் பிறகு, இந்த கிணற்றுத் தண்ணீர் திடீரென மேலேயும் கீழேயும் அலைபோல அசைய ஆரம்பித்துள்ளது. இதைப் பார்த்து கிராம மக்கள் கடும் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தனர். இது நிலநடுக்கத்தின் அறிகுறியோ என்று அவர்கள் அஞ்சினர்.
ஆனால், இது நிலநடுக்கத்தால் ஏற்பட்டது அல்ல என்றும், இதற்குப் பெயர்தான் "கிணறு சீச்" (Well Seiche) என்றும் அறிவியல் ரீதியாக விளக்கப்பட்டுள்ளது.ஏனென்றால் , அதிகப்படியான கனமழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் திடீரென வெகுவாக உயர்ந்துள்ளது. அந்த கிணறு ஒரு அடைபட்ட நிலத்தடி நீர்ப்படுகையுடன் (Confined Aquifer) இணைந்திருப்பதால், நீர்மட்டம் வேகமாக உயரும்போது பாறைகளுக்குள் சிக்கியிருந்த காற்றும் வாயுவும் வெளியேற முயன்றுள்ளன.
அப்போது உண்டாகும் கடுமையான அழுத்தத்தால்தான் தண்ணீருக்குள் ஒரு 'நிக்கிற அலை' (Standing Seiche) உருவாகி, தண்ணீர் ஏறி இறங்கி ஆடுகிறது. மற்ற பக்கத்து கிணறுகளில் இந்த அமைப்பு இல்லாததால், அங்கு இதுபோன்ற நிகழ்வு எதுவும் நடக்கவில்லை.
இது முழுக்க முழுக்க இயற்கையாகவும் தற்காலிகமாகவும் நடக்கக்கூடிய ஒன்றுதான் என்பதால், பொதுமக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், சில நாட்களில் இது தானாகவே நின்றுவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏரி மற்றும் குளங்களில் கூட காற்றழுத்தம் அல்லது சிறிய நில அதிர்வுகள் காரணமாக இதுபோன்று தண்ணீர் அசையும் நிகழ்வுகள் நடப்பதுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
