திருச்செந்தூர் : பக்தர்களிடம் காணிக்கை வாங்கி மதுஅருந்திய நபர்...கடுமையாக எச்சரித்த இளைஞர்!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ‘மடிபிச்சை’ பெயரில் காணிக்கை பெற்று தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Hero Image

திருச்செந்தூர் : சுப்பிரமணியசுவாமி கோயிலில் 'மடிபிச்சை' என்ற பெயரில் பக்தர்களிடம் காணிக்கை பெற்று, அதனைத் தவறான செயல்களுக்குப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் மோசடி குறித்து இளைஞர் ஒருவர் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

அதாவது கோவிலுக்குள் 'மடிபிச்சை' என்ற பெயரில் பக்தர்களிடம் காணிக்கை பெற்று கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துவது உண்டு. ஆனால், வைரலாகி வரும் வீடியோவில் அந்த நபர் 'மடிபிச்சை' என்ற பெயரில் காணிக்கை பெற்று அந்த பணத்தை கொண்டு சென்று மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அவர் மது அருந்தியதை பார்த்த வீடியோ எடுத்த இளைஞர் அவரை பிடித்து ஆதங்கத்துடன் சில கேள்விகளை எழுப்பியதும் அந்த வீடியோவில் தெரிய வந்திருக்கிறது. வீடியோவில் அந்த நபர் பேசியதாவது "இங்கு நிறைய பேர் மோசடி (Fraud) வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இதனால் மனதுக்குள் ஆயிரத்தெட்டு கவலைகளையும் கஷ்டங்களையும் சுமந்துகொண்டு, உண்மையான பக்தியுடன் மடிபிச்சை எடுப்பவர்களுக்கு இது ஒரு பெரிய அவமானத்தை ஏற்படுத்துகிறது. இந்த மடிபிச்சை மோசடி குறித்து நான் வீடியோவில் முழுமையாகப் பதிவு செய்துள்ளேன், அதை முழுமையாகப் பாருங்கள்" என்று கூறிவிட்டு, அந்த நபரை நோக்கி முறைகேடுகள் குறித்துக் கேள்வி எழுப்புகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "கோயிலுக்கு வந்து சாமி கும்பிடும் பக்தர்கள் என்ன பைத்தியக்காரர்களா? மடிபிச்சை என்பது ஒருவரின் ஆன்மீக வேண்டுதல் சம்பந்தப்பட்ட புனிதமானது. அதை இப்படி மலிவுப்படுத்தி கொச்சைப்படுத்தக் கூடாது. நீ ஒன்றும் தர்மம் கேட்கவில்லை, மடிபிச்சை என்ற பெயரில் பெரிய அளவில் மோசடிசெய்து கொண்டிருக்கிறாய். உன்னை ஏற்கனவே ஒருமுறை வீடியோவில் பதிவு செய்துள்ளேன், இனி இது தொடர்ந்தால் அவ்வளவு தான்" என்று எச்சரிக்கிறார்.

இதற்குப் பதிலளித்த அந்த நபர், தான் மது அருந்தியிருந்தால் இனி மடிபிச்சை எடுக்க மாட்டேன் என்றும், தான் செய்தது தவறுதான் என்பதால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம் என்றும் கெஞ்சும் குரலில் கேட்டுக்கொள்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

கோவில்களின் பெயரிலும் பக்தர்களின் ஆன்மீக நம்பிக்கைகளின் பெயரிலும் இதுபோன்ற மோசடிச் செயல்கள் அரங்கேறி வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.