சென்னை : தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இன்றைய அமர்வில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எம்.எல்.ஏ எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்தபோது, அதிமுக மற்றும் தவெக கூட்டணி குறித்து அவர் அடித்த கமெண்ட்டால் அவையில் பெரும் சுவாரசியமும் சிரிப்பலையும் ஏற்பட்டது.
கேள்வி நேரத்தில் பூந்தமல்லி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்துப் பேசினார். அப்போது அவர், "திருவள்ளூர் எங்களுடைய மாவட்டம், அங்கு பத்துக்கு பத்து தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றுள்ளது" எனக் குறிப்பிட்டார். அமைச்சர் இவ்வாறு பேசிய உடனே அவையில் இருந்த அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி தொகுதியில் அதிமுக தான் வெற்றி பெற்றது என்பதைச் சுட்டிக்காட்டி அமைச்சரின் கூற்றைத் திருத்தினர்.
அதிமுக உறுப்பினர்களின் இந்த திருத்தத்தை ஏற்றுக்கொண்டு சிரித்தபடியே பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "மன்னிக்கவும், பத்துக்கு ஒன்பது தொகுதிகள். அதிமுகவும் நம்மதும் எல்லாம் ஒன்று தானே" என நகைச்சுவையாகவும் கிண்டலாகவும் பதிலளித்தார். தவெக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒன்றுதான் என்ற தொனியில் அமைச்சர் பேசிய இந்த கமெண்ட்டால் அவையில் திடீரென சலசலப்பும் சிரிப்பொலியும் எழுந்தது.
அமைச்சரின் இந்த சுவாரசியமான பதிலைக் கேட்டு அங்கிருந்த அவை தலைவரும் சிரித்துக்கொண்டே, "இல்லை, அந்த உறவைப் பற்றி எல்லாம் இந்த அவைக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் தாராளமாகச் சொல்லலாம்" எனக் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து தனது கருத்திற்கு விளக்கம் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "இல்லை, நான் அரசியல் கூட்டணியைக் குறிப்பிடவில்லை. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கும், மறைந்த முதலமைச்சர் அம்மா (ஜெயலலிதா) அவர்களுக்கும் இடையே இருந்த கொள்கை ரீதியிலான மக்கள் நல உறவைத்தான் நான் குறிப்பிட்டேன்" என்று விளக்கமளித்தார்.
மேலும் பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ-வின் கோரிக்கைக்குப் பதிலளித்த அமைச்சர், "எங்கெல்லாம் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என்று மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தாரோ, அதற்கான முதற்கட்டப் பணிகள் அனைத்தும் தற்போதே தொடங்கப்பட்டுவிட்டன என்பதை இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன்" எனக் கூறி விவாதத்தை நிறைவு செய்தார்.
