முதல்வர் பழனிசாமியின் சொத்து மதிப்பு ரூ.1 கோடி குறைவு.! ஆனா, அசையா சொத்து மதிப்பு சற்று உயர்வு.!
எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் பழனிசாமியின் சொத்து மதிப்பு ரூ.1 கோடி குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் 7வது முறையாக போட்டியிடுவதற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று மதியம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வேட்பு மனுவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
வேட்புமனு தாக்கல் செய்யும் போது தங்களின் சொத்து விவரங்களை குறிப்பிட வேண்டியது கட்டாயம். அந்த வகையில், இன்று முதல்வர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவருடைய சொத்து குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1 கோடி சொத்து மதிப்பு குறைந்திருக்கிறது.
2016ல் ரூ.3.14 கோடி இருந்த அசையும் சொத்து, 2021ல் ரூ.2.01 கோடியாக சரிவை கண்டுள்ளது. இதுபோன்று, 2016ல் ரூ.4.66 கோடியாக இருந்த அசையா சொத்து மதிப்பு, 2021ல் ரூ.4.68 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல் 20216ல் கடன் அளவு ரூ.33.73 லட்சமாக இருந்த நிலையில், தற்போது ரூ.29.75 லட்சமாக குறைந்துள்ளது.
குறிப்பாக 2016ம் ஆண்டில் முதல்வரின் சொத்து விவர பட்டியலில், அவர் மற்றும் அவருடைய மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் பெயரில் காட்டப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 2021ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சொத்து மதிப்பு பட்டியலில் முதல்வர் பழனிசாமி, அவரது மனைவி மற்றும் இந்து கூட்டுக்குடும்பம் என்ற அடிப்படையில் சொத்து விவரங்கள் காட்டப்பட்டுள்ளது.
மேலும், முதல்வர் கையிருப்பில் ரூ.6 லட்சம், அவரது மனைவிடம் ரூ.2 லட்சம், இந்து கூட்டுக்குடும்ப கையிருப்பு ரூ.11 லட்சமாகவும் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் முதல்வரின் அசையும் சொத்து நகை மதிப்பு ரூ.4.20, அவரது மனைவியின் நகை மதிப்பு ரூ.30.24 மதிப்பிற்கு நகைகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.