முதல்வர் குறித்து சர்ச்சை பேச்சு! உதயநிதி ஸ்டாலின் மீது பாயும் கண்டன அலைகள்!

தஞ்சையில் நடைபெற்ற காவிரி தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Hero Image

தஞ்சாவூர் : பனகல் கட்டடம் முன்பு, கர்நாடகாவின் மேகதாது அணை விவகாரம் மற்றும் அது குறித்து தவெக அரசு உரிய எதிர்வினையாற்றவில்லை எனக் கூறி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு தற்போது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளதுடன், பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்குக் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

உதயநிதியின் சர்ச்சைப் பேச்சு என்ன?

தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், வேளாண்மைத் துறை அமைச்சர் பட்ஜெட் நகலை எடுத்துக் கொண்டு திருப்பதிக்குச் செல்வதாகவும், மொத்த அமைச்சரவையும் 'ஜோக்கர்' கூட்டமாக இருப்பதாகவும் விமர்சித்தார். மேலும், மேட்டூர் அணை திறக்கப்படாதது பற்றிய கவலை முதலமைச்சர் விஜய்க்கு இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். இதற்கிடையில், அங்கிருந்தவர்கள் நடிகை ஒருவரின் பெயரைக் கூற, அதற்கு உதயநிதி இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாகப் பதிலளித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. அவரது இந்த மேடைப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலையத்தில் புகார்

காவிரி விவகாரம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாகப் பேசியதாகத் தவெக மகளிர் அணி அமைப்பாளர் சார்பில் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாகப் பேசியதாகத் தொடர் புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

கண்டனங்கள்

உதயநிதியின் இந்தப் பேச்சுக்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் என பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்:

அமைச்சர் அருண்ராஜ் எக்ஸ் (X) தளத்தில் பதிவு: "காவிரியை நம்பி இருக்கும் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையே இழிவுபடுத்துகிற வகையில் உதயநிதியின் ஆபாச மேடைப் பேச்சு அருவெறுப்பூட்டுகிறது; மிகவும் கண்டிக்கத்தக்கது" எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கண்டனம்: "அண்ணா உருவாக்கிய இயக்கத்தை ஆபாச மொழியால் அழிக்கிறார் உதயநிதி. பெண்கள் மற்றும் தாய்மார்கள் பற்றி அவர் கொண்டிருக்கும் வக்கிர சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக இன்று அவர் பேசியுள்ள ஆபாசப் பேச்சு கேட்பவர்களைக் காது கூசச் செய்கிறது; பெண்களை இழிவுபடுத்தும் இந்த இழிவான பேச்சை தாய்மார்களும், அக்கா-தங்கைகளும் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

அண்ணாமலை (வீ தி லீடர்ஸ் அமைப்பு): "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா? நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, 'இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?' என்று தோன்றியது. பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்" என மிகக் கடுமையான விமர்னத்தை முன்வைத்துள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன் (பாஜக மூத்த தலைவர்): காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் குறித்தும், மேடையில் குறிக்கப்பட்ட நபர் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொச்சையான மற்றும் மோசமான உள் அர்த்தம் கொண்ட வார்த்தைகளைப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என விமர்சித்துள்ளார்.