கலைஞரின் மூத்த மகனான மு.க.முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்.!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரரும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.முத்து (வயது 77), வயது மூப்பு காரணமாக 2025 ஜூலை 19 அன்று காலமானார்.
இந்நிலையில், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள மு.க.முத்துவின் வீட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
மதுரையில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற எம்.பி. கனிமொழியும், நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு திரும்பியுள்ளார். மு.க.முத்து வீட்டிற்கு திமுகவினர், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த துயரமான தருணத்தில், மு.க.ஸ்டாலின் தனது அன்பு அண்ணனை இழந்து வேதனையடைவதாகவும், தாய்-தந்தையருக்கு இணையாக பாசம் காட்டிய மு.க.முத்துவின் மறைவு தன்னை பெரிதும் பாதித்ததாகவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.