சென்னை : தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் குறித்தும் பெண்கள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, பெண்கள் பற்றி அவதூறாகப் பேசியதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மகளிரணித் தலைவர் பைரவி தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில், உதயநிதி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தஞ்சாவூரில் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, டிஎஸ்பி அழகேசன் தலைமையிலான தஞ்சை கிழக்கு காவல் நிலைய போலீசாரும் நீலாங்கரை இல்லத்திற்கு வருகை தந்தனர்.
அங்கு குவிக்கப்பட்டிருந்த காவலர்களிடம் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வழக்கறிஞர் வரும் வரை பொறுத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது, உதயநிதியை உடனடியாகக் கைது செய்யக் கோரி இணை ஆணையர் விஜயகுமாரிடம் கிருத்திகாவும் மா.சுப்பிரமணியனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதாகப் பதிவான இந்த வழக்கில், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்த தஞ்சை போலீஸார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை அதிகாரப்பூர்வமாகக் கைது செய்துள்ளனர்.
எதிர்கட்சித்தலைவர் உதயநிதி அழைத்துச் செல்லக்கூடிய வாகனத்தை முற்றுகையிட்டு திமுகவினர் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.போலீசாருக்கும் திமுகவினரிடம் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
மேலும், கைது செய்து காவல்துறை வாகனத்தில் அழைத்து சென்ற போது இந்த நடவடிக்கையை நான் காமெடியாக பார்க்கிறேன்.. என சிரித்தபடி உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
