கறிக்கோழி வாங்குவோருக்கு ஷாக்... ஜூலை 31 முதல் கடைகள் மூடப்படுமா?

தமிழ்நாடு முழுவதும் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தப்படும் என கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Hero Image

சென்னை : தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி விற்பனை மற்றும் வர்த்தகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், கோழி வணிகர்களின் கூட்டமைப்பு ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூலை 31-ம்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 60,000 கறிக்கோழி விற்பனைக் கடைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

வணிகர்களின் குற்றச்சாட்டு என்ன?

இந்த விற்பனை நிறுத்த அறிவிப்புக்குக் கோழி வணிகர்களின் கூட்டமைப்பு தரப்பிலிருந்து சில முக்கியக் காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கோழி உற்பத்தியாளர்கள் கோழிகளைச் சந்தைகளுக்கும், கடைகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கும் போது, அவற்றின் எடையை (Weight) வேண்டுமென்றே அதிகரித்து லாபம் ஈட்டுவதற்காகக் கழுத்து வரை தீவனம் (Feed) திணித்து அனுப்புவதாகக் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு கழுத்து வரை தீவனம் வைக்கப்படுவதால், கோழிகளை வெட்டும் போது அவற்றின் குடலில் உள்ள கழிவுகள் மற்றும் தீவனங்கள் கறியுடன் கலந்து விடுவதாகவும், இது பொதுமக்களின் உடல்நலத்திற்குக் கேடு விளைவிப்பதுடன், கறியின் தரம் மற்றும் சுவையையும் முற்றிலுமாகப் பாழ்படுத்துவதாகவும் வணிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

உற்பத்தியாளர்களின் இந்த முறைகேடான செயலால் தாங்கள் நுகர்வோர் மத்தியில் கடும் அவதூறுக்கு ஆளாவதாகவும், தரமான கறியை வழங்க முடியாத சூழல் உருவாக்கப்படுவதாகவும் வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தச் சிக்கலுக்கு உற்பத்தியாளர்கள் உரிய தீர்வு காண வேண்டும் என்றும், கோழிகளின் எடையைக் கூட்டுவதற்காக இதுபோன்று தீவனம் திணிக்கும் முறையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் வணிகர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

குறிப்பிட்ட கெடுவுக்குள் கோழி உற்பத்தியாளர்கள் தங்களது முறைகளை மாற்றிக்கொள்ளாவிட்டால், அறிவித்தபடியே வரும் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனையைத் தீவிரமாகப் புறக்கணிப்பது என வணிகர்கள் உறுதியாகக் காட்டியுள்ளனர். இந்த திடீர் போராட்டம் மற்றும் விற்பனை நிறுத்த அறிவிப்பு காரணமாகக் கறிக்கோழி வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமமக்கள் மத்தியில் பெரும் குழப்பமும் எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.