,

விசாரணைக்கு வராததால் சஸ்பெண்ட்! 20 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்துள்ளேன் – ரூபி மனோகரன்

By

கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுகிறேன் என்று நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன் பேட்டி.

காங்கிரஸ் கட்சியில் இருந்து நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரனை தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி அறிவித்திருந்தார். சத்தியமூர்த்தி பவனில் மோதல் நடந்த விவகாரத்தில் ரூபி மனோகரன் மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

சத்யமூர்த்தி பவனில் நடைபெற்ற மோதல் தொடர்பாக ரூபி மனோகரன் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்றும் அவர் உரிய பதில் அளித்த பிறகு அவர் மீதான நடவடிக்கையை திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அடுத்து நடைபெறவுள்ள குழு கூட்டத்தில் தாங்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

அதுவரை ரூபி மனோகரன் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் என காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தெரிவித்திருந்தது. சத்யமூர்த்தி பவனில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்த விசாரணைக்கு பின் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், செய்யாத தவறுக்கு கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது வருத்தம் அளிக்கிறது என ரூபி மனோகரன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், விசாரணைக்கு வராததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டது வேதனையளிக்கிறது. 20 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு உழைத்துள்ளேன். பல்வேறு நிகழ்ச்சிகள் இருப்பதால் இன்று விசாரணைக்கு ஆஜராக முடியாத சூழல். காங்கிரஸ் தலைமை என்மீது எடுத்த நடவடிக்கை தவறானது. தேசிய கட்சியில் முறையாக விசாரிக்காமல் முடிவெடுத்துள்ளார்கள்.

நான் தேதி மட்டுமே மாற்றிக் கேட்டேன், விளக்கம் கட்டாயம் கொடுப்பேன், காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது.
தவறு செய்தவர்கள் மீது நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுகிறேன், அகில இந்திய தலைமை சரியான முடிவை சொல்லும் என நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Dinasuvadu Media @2023