TASMAC-ல் இனி ஓவர் ரேட் வசூல் செய்தால் சஸ்பெண்ட்... புதிய உத்தரவு!

தமிழக டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Hero Image

சென்னை : தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதலாக மதுபானங்களை விற்பனை செய்யும் பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளைக் கடுமையாக்கி டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், அதனை முற்றிலும் தடுக்கும் நோக்கில் இந்த அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

புதிய சுற்றறிக்கையின்படி, டாஸ்மாக் கடைகளில் முறை கேடுகளில் ஈடுபடுவோர் மீது கட்டம் கட்டமாக கடுமையான தண்டனைகள் வழங்கப்படவுள்ளன. அதன்படி, முதல்முறை கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர் 1 மாத காலத்திற்குத் தற்காலிக பணிநீக்கம் (Suspension) செய்யப்படுவார்.

ஒருவேளை அவர்கள் இரண்டாவது முறையும் அதே தவறைத் மீண்டும் செய்தால், அவர்களது தற்காலிக பணிநீக்கக் காலம் 3 மாதங்களாக அதிகரிக்கப்படும். தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் இதே தவறு செய்யும் பட்சத்தில், அவர்கள் உடனடியாகத் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவதோடு, அவர்கள் மீது துறை ரீதியான குற்றக் குறிப்பாணையும் (Charge Memo) வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்பவர்களுக்குக் கடுமையான பண அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோரிடம் 10 ரூபாய் அல்லது அதற்கு மேல் கூடுதல் விலை வசூலிக்கப்பட்டால், அந்தச் கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

இந்த அபராதத் தொகையானது குறிப்பிட்ட விகிதாச்சாரத்தின்படி வசூலிக்கப்படும்; அதாவது, அபராதத் தொகையில் 60 விழுக்காட்டை தவறிழைத்த விற்பனையாளரும், மீதமுள்ள 40 விழுக்காட்டை அந்தக் கடைக் கண்காணிப்பாளரும் (Supervisor) செலுத்த வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகளைத் தவிர்க்கும் விதமாக வந்துள்ள இந்த அதிரடி உத்தரவு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது