நாகை :தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யின் நாகை மாவட்ட பிரச்சாரத்துக்கு, பாதுகாப்பு கருதி மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 20, 2025 அன்று நண்பகல் 12:30 மணிக்கு புத்தூர் அண்ணா சிலை அருகே நடைபெறும் இந்த பிரச்சாரத்துக்கு, தவெக மாவட்டச் செயலாளர் சுகுமாரின் கோரிக்கையை ஏற்று, நாகை மாவட்ட காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக, புத்தூர் ரவுண்டானா பகுதியில் பிரச்சாரம் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் பாதுகாப்பு கருதி அண்ணா சிலை பகுதியாக மாற்றப்பட்டது. நாகை காவல்துறை, பிரச்சாரத்துக்கு கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. விஜய்யின் பிரச்சார வாகனத்தை தொண்டர்கள் தொடர்ந்து செல்லக்கூடாது, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது, மேலும் பிரச்சாரம் அரை மணி நேரத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.
இந்த நிபந்தனைகள், திருச்சி பிரச்சாரத்தில் தொண்டர்கள் 23 நிபந்தனைகளை மீறி, பொது சொத்துக்களை சேதப்படுத்தியதால் வந்தவை. தவெக தரப்பு, இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, அமைதியாக பிரச்சாரம் நடத்த உறுதியளித்துள்ளது. இருப்பினும் காவல்துறை இவ்வளவு நிபந்தனைகள் கொடுத்ததும் தொண்டர்கள் கேட்காமல் வாகனத்தை பின் தொடர்ந்து வருகிறார்கள்.
அதே போலவே, புத்தூர் அண்ணா சிலை பகுதியில் மின்விளக்கு கம்பங்கள் அருகில் இருப்பதால், தொண்டர்கள் அவற்றில் ஏறி ஆரவாரம் செய்யாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். திருச்சி கூட்டத்தில் தொண்டர்கள் மரங்கள், கட்டடங்கள், மின்கம்பங்களில் ஏறி பிரச்சினை ஏற்பட்டதால், இந்த முடிவு எடுக்கப்பட்டது. தவெக, “நாங்கள் ஒழுங்காக பிரச்சாரம் செய்வோம்,” என்று உறுதியளித்தும் தொண்டர்கள் இது போன்று செயல்பட்டு வருவது பேசுபொருளாக மாறியுள்ளது.
