சுற்றுலா ஆசை காட்டி கடத்தல்... தாய்லாந்தில் 3 இந்தியர்களுக்கு நேர்ந்த கொடூரம்!

3 இந்திய இளைஞர்கள் கடத்தப்பட்டு, குடும்பத்தினரிடம் கிரிப்டோகரன்சி மூலம் பிணைத் தொகை கேட்டு மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hero Image

தாய்லாந்து : நாட்டின் பட்டாயா நகருக்குச் சுற்றுலா சென்ற மூன்று இந்தியர்களைக் கடத்தி, அவர்களைச் சித்ரவதை செய்து குடும்பத்தினரிடம் கிரிப்டோகரன்சி மூலம் பிணைத் தொகை (Ransom) கேட்ட ஐந்து இந்தியர்களை தாய்லாந்து காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது.

பாங்க்கோக் போஸ்ட் (Bangkok Post) வெளியிட்ட தகவலின்படி, மோஹித் (23), ஆஷிஷ் (24), ஹிமான்ஷு (20) ஆகிய மூன்று இந்திய இளைஞர்களும் குறைவான செலவில் (Budget holiday package) தாய்லாந்துக்குச் சுற்றுலா செல்லலாம் என்ற ஆசை வார்த்தை காட்டப்பட்டு வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆனால், தாய்லாந்து சென்றடைந்த அவர்களை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று பல நாட்களாகப் பிணைக் கைதிகளாக அடைத்து வைத்த கும்பல், கொடூரமாகத் தாக்கிச் சித்ரவதை செய்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள ஐந்து இந்தியக் குற்றவாளிகள் அவ்தார் சிங் (38), ஜக்ஜித் சிங் (38), ராம்பாலக் குமார் (24), சுக்விர் சிங் (37), குல்ரா சிங் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாங்க்கோக்கின் க்ளோங் டான் (Khlong Tan) மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நாட்டை விட்டுத் தப்பிக்க முயன்றபோது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் பட்டாயா போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது என்னவென்றால், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு சாட் அப்ளிகேஷன் (Chat application) மூலம் தங்களுக்கு அறிமுகமான பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர்தான் இந்த மூவரையும் கடத்துமாறு தங்களுக்கு உத்தரவிட்டதாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். துபாயைச் சேர்ந்த அந்த நபர் இதற்கான மூளையாக (Mastermind) செயல்பட்டிருக்கலாம் என புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

இந்தக் கடத்தலைச் செய்தால் பாதிக்கப்பட்டவர்களின் பணம் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்கள் தங்களுக்கு வழங்குவதோடு, தாய்லாந்தில் இருந்து தப்பியோட விமான டிக்கெட்டுகளையும் வாங்கித் தருவதாக அந்த நபர் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தொடர்பு குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட இளைஞர்களின் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டுத் தாக்கப்பட்ட வீடியோ கால் பதிவுகளைக் காட்டி, அவர்களின் குடும்பத்தினரிடம் தலா 40 லட்சம் ரூபாய் (சுமார் $41,831) பிணைத் தொகையாகக் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், தாய்லாந்தில் உள்ள இந்தியத் தூதரகம் கடந்த ஜூலை 21-ஆம் தேதி சோன்புரி குடிவரவு போலீசாருக்கும், பட்டாயா நகர போலீசாருக்கும் தகவல் அளித்தது.

இதனைத் தொடர்ந்து ரகசியத் தகவல்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில், பட்டாயாவில் உள்ள ஒரு இருமடி டவுன்ஹவுஸில் கட்டப்பட்டிருந்த மூன்று இளைஞர்களும் திங்கள்கிழமை மாலையில் மீட்கப்பட்டனர்.

கை கால்கள் கட்டப்பட்டுக் கிடந்த அவர்களிடம் இருந்து பிசின் டேப், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட மரக்கட்டை மற்றும் குடும்பத்தினரை மாயம் செய்யப் பயன்படுத்தப்பட்ட சிவப்பு பெயிண்ட் (காயம்பட்டது போல் காட்டப் பயன்படுத்தப்பட்டது) ஆகியவை கைப்பற்றப்பட்டன. மேலும், இவர்களுக்கு முன்பும் இதே வீட்டில் மற்றொரு இந்தியர் அடைக்கப்பட்டு, அவரது குடும்பத்தினர் சுமார் 30 லட்சம் ரூபாய் பிணைத் தொகை செலுத்திய பிறகே விடுவிக்கப்பட்டதாக மீட்கப்பட்ட இளைஞர்கள் திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளனர்.