T20I Tri-Serie: நமீபியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றி!

நமீபியா மற்றும் ஜிம்பாப்வே மோதும் 5வது டி20 லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ZIMBABWE VS NAMIBIA

நமீபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் 5வது லீக் போட்டியில் நமீபியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த மிக முக்கியமான போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

எராஸ்மஸ் தனி ஆவர்த்தனம்

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நமீபிய அணியில் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். ஆனால் அணியின் கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் (Gerhard Erasmus) மட்டும் தனி ஆளாகப் போராடி 48 பந்துகளில் 88 ரன்களைக் குவித்து அசத்தினார்.

அவருக்கு அடுத்தபடியாக அலெக்சாண்டர் வோல்ஷெங்க் (Alexander Volschenk) 29 ரன்களை எடுத்ததன் மூலம் நமீபிய அணி 20 ஓவர்களில் 156 ரன்களை எட்டியது. ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை பிராட் எவான்ஸ் (Brad Evans) 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இன்னசென்ட் கயா அபாரம்

இதனைத் தொடர்ந்து 157 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி தொடக்கத்திலேயே பென் கர்ரன் விக்கெட்டை இழந்தது. இருப்பினும் தொடக்க வீரர் இன்னசென்ட் கயா (Innocent Kaia) அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 72 ரன்களைக் குவித்துத் திருப்பத்தை ஏற்படுத்தினார்.

அவருக்குத் துணையாக பிரையன் பென்னட் மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். நமீபிய அணியின் பந்துவீச்சாளர் ரூபன் டிரம்பெல்மேன் (Ruben Trumpelmann) கடுமையாகப் போராடி 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சிக்ஸருடன் அதிரடி வெற்றி

ஆட்டத்தின் இறுதிப் கட்டத்தில் நமீபிய அணியின் ஜே.ஜே ஸ்மித் (JJ Smit) வீசிய 19வது ஓவரில் ரியான் பர்ல் அட்டகாசமான சிக்ஸரை விளாசினார். இதனால் ஜிம்பாப்வே அணி 18.1 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எளிதாக எட்டியது.

இறுதிப்போட்டி வாய்ப்பு

இந்த மிக முக்கியமான வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இறுதிப்போட்டி வாய்ப்பைத் தக்கவைத்துள்ளது. நாளைய போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றால், ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.