உலகெங்கிலும் முடங்கிய சாட்ஜிபிடி (ChatGPT) பயனர்கள் கடும் அவதி!

ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சாட்ஜிபிடி தளம் உலகெங்கிலும் திடீரென முடங்கியது. இதனால் பயனர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

chatgpt

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான சாட்ஜிபிடி (ChatGPT) இன்று உலகெங்கிலும் திடீரென முடங்கியது. இதனால் பயனர்களால் சாட்போட் தளத்திற்குள் நுழையவோ அல்லது எந்தவொரு கேள்விகளையும் கேட்கவோ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஓபன்ஏஐ விளக்கம்

பயனர்கள் பலரும் தங்கள் கணக்குகளில் உள்நுழையும் போது 'எரர் 404' (Error 404) என்ற தகவல் வருவதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தனது வலைத்தளத்தில் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தங்கள் சர்வர்களில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாகவும், அதைச் சரிசெய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரல் பதிவு (Voice mode) மற்றும் ஜிபிடிஸ் (GPTs) உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட சேவைகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன.

மற்ற ஏஐ தளங்களும் பாதிப்பு

சாட்ஜிபிடி முடங்கிய அதே நேரத்தில் மற்ற பிரபல ஏஐ தளங்களான கிளாட் (Claude) மற்றும் க்ரோக் (Grok) தளங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் பல ஏஐ தளங்கள் முடங்கியிருப்பது தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திடீர் முடக்கத்தால் ஐடி துறை ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். விரைவில் சர்வர் பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டுச் சேவைகள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.