அமெரிக்காவில் ஒரே நேரத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட 15 வாகனங்கள் – 10 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவிலுள்ள அலபாமா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் 15 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்ட விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணத்தில் உள்ள கிளாடிட் பகுதியில் புயல் பாதிப்பு காரணமாக கனமழை பெய்துள்ளது. இந்நிலையில், பள்ளி குழந்தைகள் கைவிடப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள் என பலருக்கு அடைக்கலம் அளிக்கக்கூடிய காப்பகத்தை சேர்ந்த பேருந்து ஒன்று காப்பகத்திலுள்ள நபர்களை சுமந்துகொண்டு அவ்வழியே சென்று உள்ளது. இந்நிலையில் இந்தப் பேருந்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து காரணமாக பேருந்துக்கு பின் வந்த 15 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றோடொன்று மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் காப்பகத்தின் பேருந்தில் இருந்த 8 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த பேருந்துக்கு பின்பு மோதிக்கொண்ட வாகனம் ஒன்றில் இருந்த 29 வயது நபர் மற்றும் அவரது 9 மாத கைக்குழந்தையும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
மொத்தமாக இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒன்பது பேர் குழந்தைகள் தான். மேலும், காவல்துறையினருக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 15 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.