ஒடிசா ரயில் விபத்து: மீட்கும் பணி நிறைவு! காவச் எனும் பாதுகாப்பு அம்சம் இல்லை – ரயில்வே செய்தி தொடர்பாளர்!

Railway Spokesperson

விபத்து நடந்த இடத்தில் காவச் எனும் பாதுகாப்பு அம்சம் அமைக்கப்படவில்லை என ரயில்வே செய்தி தொடர்பாளர் தகவல்.

ஒடிசாவின் பாலசோரில் நடந்த பயங்கர ரயில் விபத்தில் பயணிகளை மீட்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்தார்.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ரயில்வே செய்தி தொடர்பாளர், விபத்தில் பயணிகள் மீட்புப் பணிகள் முடிந்துவிட்டன, இப்போது சீரமைப்புப் பணிகளைத் தொடங்கி உள்ளோம். விபத்தில் உருக்குலைந்த ரயில் பெட்டிகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. நேற்று இரவு ரயில் விபத்தை தொடர்ந்து நடைபெற்று வந்த பயணிகள் மீட்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

இந்த பயங்கர ரயில் விபத்தில் 238 பேர் உயிரிழந்துள்ளனர், 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டு திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் கூறினார். தற்போது 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, 39 ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன, 10 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, 100க்கும் மேற்பட்டோர் கருணைத் தொகையை கோரியுள்ளனர்.

பாலசோர், சோரோ மற்றும் பஹனகா பஜார் ஆகிய மூன்று இடங்களில் இதற்கான கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், விபத்துக்குள்ளான ரயில் வழித்தடத்தில் ரயில் விபத்துகளை தவிர்க்க காவச் என்று அழைக்கப்படும் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு அமைக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதாவது, ரயில்வே தண்டவாளங்களுக்கு இடையே அமைக்கப்படும் பாதுகாப்பு அம்சமான காவச் அமைக்கப்படவில்லை என்றும் ரயில்களின் வருகை உள்ளிட்ட தகவல்களை முன்கூட்டியே தரும் காவச் என்று அழைக்கப்படும் தொழில்நுட்பம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

2022 மத்திய பட்ஜெட்டில் ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் இந்த பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  ஒடிசாவில் 3 ரயில்கள் மோதிய கோர விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸில் பல பெட்டிகள் சிதைந்து உருகுலைந்தன. உருக்குலைந்த பெட்டிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி 15 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்