பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
பணமோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் டெல்லி பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW) போலீசாரால், ரூ.1,000 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.5 கோடி மோசடி செய்ததாக புகாரின் அடிப்படையில், சென்னையில் உள்ள அவரது அண்ணா நகர் இல்லத்தில் இருந்து இன்று கைது செய்யப்பட்டார்.
கடந்த 2018-ல் மோசடி மூலம் கிடைத்த பணத்தை சினிமாவில் செலவிட்டுள்ளது தெரியவந்துள்ளது. 2018-ம் ஆண்டு முதல் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், 2 முறை அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
உள்ளூர் உளவுத்துறை மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பு உதவியுடன், டெல்லி காவல்துறையின் EOW, சீனிவாசனை சென்னையில் பதுங்கியிருப்பதாக கண்டுபிடித்தது. விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த நிலையில், அவரை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது. மேலும், அவர் மீது சென்னை மற்றும் டெல்லியில் மொத்தம் எட்டு மோசடி மற்றும் கிரிமினல் மிரட்டல் வழக்குகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மோசடி குற்றச்சாட்டில் 2012 ஆம் ஆண்டு சென்னை காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார், ஆனால் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஏப்ரல் 2013 இல் மத்திய குற்றப்பிரிவால் (CCB) மீண்டும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது, ஆனால் அந்த ஆண்டு அக்டோபரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்என்பது குறிப்பிடத்தக்கது.