இவர்களுக்கு மட்டும்தான் இலவசப்பேருந்து..! கர்நாடக அரசு நிபந்தனை..!

பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்திற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தியிருந்தார். அந்த கூட்டத்தில் 5 முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதோடு, திட்டங்கள் அமலுக்கு வரும் தேதியையும் சித்தராமையா அறிவித்தார்.
அதன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து பெண்களும் பேருந்தில் இலவசமாகப் பயணம் செய்யும் ‘சக்தி’ என்ற நான்காவது உத்தரவாதம் ஜூன் 11 முதல் அமலுக்கு வரவுள்ளது. தற்போது, பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்திற்கான சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைக் குறிப்பிடும் அரசாணையை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.
- இத்திட்டத்தின் பயனாளிகள் கர்நாடகாவை வசிப்பிடமாக கொண்டவராக இருக்க வேண்டும். பெண்களுடன், திருநங்கைகளும் ‘சக்தி’ திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- பயனாளிகள் மாநிலத்திற்குள் பேருந்து சேவைகளில் மட்டுமே பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய முடியும். மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகளிலும் பயணிக்க முடியாது.
- KSRTC, NWKRTC மற்றும் KKRTC இன் சாதாரண மற்றும் விரைவு பேருந்துகளில் 50% ஆண்களுக்கும், 50% பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். சொகுசு பேருந்துகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.
- அனைத்து பெண்களும் மாநிலத்திற்குள் ஏசி பேருந்துகள், ஸ்லீப்பர் பேருந்துகள் மற்றும் ராஜஹம்சா பேருந்துகள் தவிர அரசு பேருந்துகள், BMTC, NWKRTC, KKRTC மற்றும் KSRTC ஆகியவற்றால் இயக்கப்படும் பேருந்துகளில்இலவசமாகப் பயணம் செய்யலாம்.
- அடுத்த மூன்று மாதங்களில், ‘சேவா சிந்து’ எனும் அரசு இணையதளம் மூலம் சக்தி ஸ்மார்ட் கார்டுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.