தகதகவென மின்னும் ஆப்பிள் விஷன் ப்ரோ..கேவியர்-ன் புதிய வெளியீடு..! விலை எவ்வளவு தெரியுமா..?

கேவியர் (Caviar) 2024ம் ஆண்டு ஆப்பிள் விஷன் ப்ரோ சிவிஆர் (Apple Vision Pro CVR Edition) எடிஷனை வெளியிட உள்ளது.
ஆப்பிள் நிறுவனம், சமீபத்தில் தனது புதிய படைப்பான ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) என்று அழைக்கப்படும் Virtual Realty அம்சத்துடன் ஒரு புதிய ஹெட்செட்டை அறிமுகம் செய்தது. இந்த ஹெட்செட் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் 3,499 டாலர் என்ற விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி, இதன் விலை ரூ.2.86 லட்சமாக இருக்கும்.

ஆனால், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் அதை விட பத்து மடங்கு அதிக விலை கொண்ட விஷன் ப்ரோவை, சர்வதேச பிராண்டான கேவியர் (Caviar) வெளியிட உள்ளது. இந்த நிறுவனம், மற்ற நிறுவனங்கள் வெளியிடும் சாதனங்களை பணக்காரர்கள் பயன்படுத்துவதற்காக தங்கம், வைரம், இயற்கையான தோல் போன்ற நேர்த்தியான பொருட்களை பயன்படுத்தி ஆடம்பர சாதனங்களாக மாற்றுகிறது.

தற்போது, இந்நிறுவனம் வெளியிட உள்ள கேவியர் ஆப்பிள் விஷன் ப்ரோ சிவிஆர் (Caviar Apple Vision Pro CVR Edition) எடிஷனில் 1.5 கிலோகிராம் அளவிற்கு 18 காரட் தங்க முலாம் பூசப்பட்ட ஹெட்செட்டின் முன்பகுதி மற்றும் லெதர் ஹெட் மவுண்ட் உள்ளது. அதன் ஹெட் மவுண்ட் கொனொலி லெதரில் (Connolly leather) இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதே கொனொலி லெதர் விலை உயர்ந்த கார் ஆன ரோல்ஸ் ராய்ஸிலும் உள்ளது. இத்தகைய மதிப்பு மிக்க இந்த கேவியர் ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்ஸெட்டை வரும் 2024ம் ஆண்டு 46,000 அமெரிக்க டாலர் அதாவது, இந்திய மதிப்பிற்கு சுமார் ரூ.37.7 லட்சம் என்ற விலையில் வெளியிடவுள்ளது. இதில் 24 ஹெட்ஸெட்கள் மட்டுமே உள்ளன.

ஆப்பிள் விஷன் ப்ரோவில் உள்ள அனைத்து அம்சங்களை, இதிலும் பெற முடியும். அதாவது இதில் உள்ள கேமரா மூலம் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து அதனை பார்க்கும் போது, அது புகைப்படம் போல அல்லாமல், நீங்கள் உண்மையாகவே அங்கே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த விஷன் ப்ரோவை, ஒரு ஸ்மார்ட்போன் போல பயன்படுத்தலாம்.

ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டில் நாம் பயன்படுத்தும் செயலி அல்லது பயன்பாடுகளை கட்டுப்படுத்த எந்த ஒரு சாதாரண மேற்பரப்பையும் தொடுதிரை (Touch Screen) ஆக மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.