நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 4 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்! விரைவில் சட்டமாகிறது..

Droupadi Murmu

சமீபத்தில் நடந்து முடிந்த நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, இதில் பல மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

டெல்லி சர்வீசஸ் மசோதா:

அதில், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் டெல்லியில் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பான டெல்லி சர்வீசஸ் மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா டெல்லி விவகாரங்களில் மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் அளிக்கிறது. இந்த மசோதா, ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ள மக்களவையில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.

தரவு பாதுகாப்பு மசோதா:

டிஜிட்டல் தனி நபர் தரவு பாதுகாப்பு மசோதாவை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றினார். கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி மக்களவையிலும், ஆகஸ்ட் 9ம் தேதி மாநிலங்களவையிலும் இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அதே நேரத்தில் தனிநபர்களின் டிஜிட்டல் தரவை தவறாகப் பயன்படுத்துதல் அல்லது பாதுகாக்கத் தவறிய நிறுவனங்களுக்கு ரூ.250 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) மசோதா:

கல்வி நிறுவனங்கள், அரசு பணிகளில் சேருவது முதல், ஓட்டுனர் உரிமம், ஆதாா், திருமணப் பதிவு ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும் வரையிலான அனைத்து விதமான பணிகளுக்கும் பிறப்புச் சான்றிதழை ஒற்றை ஆவணமாகப் பயன்படுத்த வகை செய்யும் “பிறப்பு-இறப்பு பதிவு திருத்த மசோதா”வுக்கு மாநிலங்களவை திங்கள்கிழமை குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, மக்களவையில் இந்த மசோதா கடந்த ஆக.1ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

ஜன் விஸ்வாஸ் (திருத்த) மசோதா:

மேலும், ஜன் விஸ்வாஸ் (திருத்த) மசோதா மக்களவையில் நிறைவேறியிருக்கிறது. இதன்மூலம், 42 மத்திய அரசு சட்டங்களில் காணப்படும் சுமாா் 180 சிறு குற்றங்கள் கிரிமினல் குற்றப்பட்டியலில் இருந்து அகற்றப்பட்டிருக்கின்றன. மருந்து தயாரிப்பு, ஊடகங்கள், விவசாயம், சுற்றுச்சூழல், தொழில் நிறுவனங்கள் ஆகியவை தொடா்பானவை என கூறப்படுகிறது. முன்பு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த அந்தக் குற்றங்கள் இப்போது இந்த திருத்த மசோதா மூலம் அபராதம் விதிக்கும் குற்றங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.

குடியரசு தலைவர் ஒப்புதல்:

எனவே, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட 4 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.

இதில், டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) மசோதா, டெல்லியின் நிர்வாக சட்ட (திருத்தம்) மசோதா மற்றும் ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) மசோதா என 4 மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதாக்கள் விரைவில், சட்டமாக்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்