இன்னும் 4 நாட்கள் தான்! 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மாதம் ரூ.1000 – முதலமைச்சர் அறிவிப்பு

Tamilnadu CM MK Stalin

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதியானவர்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்.15 அன்று தொடங்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திட்டம் தொடர்பாக இறுதிக்கட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசின் தலைமை செயலாளர் சிவ்டாஸ் மீனா, திட்ட சிறப்பு அதிகாரி இளம் பகவத், சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலாளர் தரோஸ் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதியானவர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் கூறுகையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் தொடக்க விழாவானது வரும் 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற இருக்கிறது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1.06 கோடி பேருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய திட்டம் என்றால் இதுதான். ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கு மேற்பட்ட பெண்கள் ஆயிரம் ரூபாய் மாதந்தோறும், ஆண்டுந்தோறும் பெற போகிறார்கள். அதிகப்படியான நிதி ஒதுக்கீடு தேவைப்படும் திட்டமாகவும், அதிகப்படியான பயனாளிகள் உள்ளடக்கிய திட்டமாகவும் இது அமைந்துள்ளது. இதனை வெற்றிகரமாக நடத்தி காட்டும் பொறுப்பும், கடமையும் அதிகாரிகளுக்கு இருக்கிறது.

ஒரு கோடிக்கு மேற்பட்டவர்கள் பயன்பெறுகிறார்கள் என்பதால் கிடைக்கின்ற பாராட்டு, ஒரு கோடி பாராட்டுகளுக்கு சமம். தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத்தொகை அவர்களது வங்கி கணக்கில் வரும் செப்.15 முதல் கிடைக்கும் வகையில் நாம் ஏற்பாடு செய்துள்ளோம். இத்தகைய தகுதி பெற்ற குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் வங்கி கணக்கில் ரூ.1000 உரிமைத்தொகை வரவு வைக்கப்படும். இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.

ஏ.டி.எம்.கார்டுகள் முதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலும், பின்னரே படிப்படியாக விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால், ஏடி.எம். கார்டு வழங்கப்படுவதற்காக காத்திருக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். பயனாளிகளுக்கு பணத்தை எடுப்பதில் எந்த சிக்கலும் ஏற்படக் கூடாது, அதிலும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

அதேபோல், வரும் 15-ஆம் தேதி என்னுடைய சார்பில் மகளிருக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்தியில், பணம் எடுப்பது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய Toll. Free எண்ணும் சேர்க்கப்பட வேண்டும். இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. தகுதியுள்ளவர்கள் என நாம் தேர்ந்தெடுத்துள்ளது 1கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர்.

அப்படியானால் மற்றவர்களது கோரிக்கைகள் ஏன் ஏற்கப்படவில்லை என்பதை நாம் அவர்களுக்குச் சொல்லியாக வேண்டும். எந்த அடிப்படையில் உங்களது கோரிக்கையை எங்களால் ஏற்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியாக வேண்டும் எனவும் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்