cbcid: கூடுவாஞ்சேரி என்கவுன்ட்டர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் – ஐகோர்ட் உத்தரவு

கடந்த மாதம் சென்னை வண்டலூர் அடுத்துள்ள கூடுவாஞ்சேரி அருகே போலீசாரை ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற 2 ரவுடிகள் என்கவுன்ட்டரில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, வேகமாக வந்த காரை நிறுத்த முற்பட்டபோது இந்தச் சம்பவம் நடந்ததாக கூறப்பட்டது.
ரவுடி கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் பிரபல ரவுடியான சோட்டா வினோத் (35) உயிரிழந்து விட்டார். மேலும் அவருடன் இருந்த மற்றொரு நண்பரான ரமேஷ் (32) மீதும் துப்பாக்கி சூடு நடைபெற்ற நிலையில், அவர் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போதே பலியானர்.
தற்போது இந்த சம்பவம் குறித்து தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் போலீஸ் என்கவுன்ட்டரில் இருவர் கொல்லப்பட்ட வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
என்கவுன்ட்டரில் உயிரிழந்த வினோத் என்பவரது தாயாரின் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. போலி என்கவுன்ட்டரில் மூலம் தனது மகன் வினோத் மற்றும் ரமேஷ் கொல்லப்பட்டதாக வினோத்தின் தயார் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில், கூடுவாஞ்சேரி என்கவுண்டர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, கூடுவாஞ்சேரி என்கவுன்ட்டர் வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தும் அதிகாரி டி.எஸ்.பி அந்தஸ்து அதிகாரி விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆணையிட்டார். வினோத்தின் தாயார் ராணி தொடர்ந்த வழக்கை அக்டோபர் 10 ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.