மகளிர் செஸ் உலகக் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!
முதல் போட்டி `ட்ரா' ஆன நிலையில், இன்றைய இரண்டாவது போட்டியில் வென்று மகுடம் சூடப்போவது யார்? என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனைகள் திவ்யா தேஸ்முக், கொனேரு ஹம்பி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
கோனேரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக் இடையேயான முதல் ஆட்டம் நேற்று (ஜூலை 26, 2025) டிராவில் முடிந்தது. இருவரும் சம பலத்துடன் களமிறங்கியதால், முதல் ஆட்டத்தில் யாரும் முன்னிலை பெறவில்லை. இரண்டாவது ஆட்டம் இன்று (ஜூலை 27) இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு தொடங்கியது.
இது கிளாசிக்கல் முறையில் நடைபெறுகிறது. இதில் முதல் 40 நகர்வுகளுக்கு 90 நிமிடங்களும், பின்னர் 30 நிமிடங்களும், ஒவ்வொரு நகர்வுக்கும் கூடுதலாக 30 வினாடிகளும் வழங்கப்படுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுபவர் மகளிர் உலகக் கோப்பையை முதன்முறையாக இந்தியாவுக்கு பெற்றுத் தருவார்.
ஏற்கனவே, முதல் போட்டி `ட்ரா’ ஆன நிலையில், இன்று இரண்டாவது போட்டியிலும் சமநிலை ஏற்பட்டால், நாளை (ஜூலை 28, 2025) டைபிரேக்கர் சுற்று நடைபெறும். இதில் அதிவேக நகர்வு முறையில் முதலில் இரு ஆட்டங்கள் நடைபெறும், அதிலும் சமநிலை நீடித்தால் மேலும் இரு வாய்ப்புகள் வழங்கப்படும்.
இந்த முடிவு இந்தியாவின் முதல் மகளிர் உலகக் கோப்பை வெற்றியாளரை தீர்மானிக்கும். முடிவு இன்னும் உறுதியாகவில்லை என்றாலும், இருவரில் யார் வென்றாலும் இந்தியாவுக்கு மகுடம் உறுதியாகியுள்ளது.