Heavy Rain : 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..! வேலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது அங்கங்கே ஆரம்பித்து பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக சற்று குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அதே போல வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதில், மேற்கு திசை மாறுபாட்டின் காரணமாக 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல், சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு பல்வேரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த மழை காரணமாக வேலூரில் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையில் உள்ள தொடக்க பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். 6 முதல் 12ஆம் வகுப்பு பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.