”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாஜக செய்துவரும் துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை பாஜக அரசு வாபஸ் பெற்றது.
இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற இந்த இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில், 20 ஆண்டுகளாக எதிர் எதிர் துருவங்களாக இருந்த உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஒரே மேடையில் பங்கேற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதனை குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “மொழிஉரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. இந்தித் திணிப்புக்கு எதிராக இன்று மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது பதிவில், ”இந்தித் திணிப்பை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்பித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சட்டத்துக்குப் புறம்பாகவும் அராஜகமாகவும் நடந்துகொள்ளும் பாஜக, தாங்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி இரண்டாம் முறையாகப் பின்வாங்கி இருக்கிறார்கள். இந்தித் திணிப்புக்கு எதிராகச் சகோதரர் உத்தவ்தாக்கரே தலைமையில் இன்று மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது.
உத்தர பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் கற்பிக்கப்படும் மூன்றாம் மொழி என்ன?” என்றும், “இந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன – இந்தி பேசாத முன்னேறிய மாநிலங்களின் மக்கள் மீது ஏன் இந்தியைத் திணிக்கிறீர்கள்?” என்றும் திரு. உத்தவ்தாக்கரே எழுப்பிய கேள்விகளுக்கு, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளர்ப்பதையே முழுநேர முன்னுரிமையாக வைத்திருக்கிற ஒன்றிய அரசிடம் எந்த பதிலும் இருக்காது என்பதை நன்றாக அறிவேன்.
இந்தித் திணிப்பால் ஏராளமான இந்திய மொழிகள் அழிந்த வரலாற்றை அறியாமலும், இந்தியாவை இந்தி நாடாக்கும் செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளாமலும், “இந்தி படித்தால் வேலை கிடைக்கும்” என்ற பசப்பு வார்த்தைகளைக் கிளிப்பிள்ளைகளைப் போல ஒப்பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள அப்பாவிகள் சிலர், இனியாவது திருந்த வேண்டும்.
மராட்டியத்தின் எழுச்சி அவர்களின் அறிவுக் கண்களைத் திறக்கும்! தமிழுக்கு நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை, கீழடி நாகரிகத்தை அங்கீகரிக்க மறுக்கும் ஆணவம் நீடிக்க விட மாட்டோம். தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாஜக செய்துவரும் துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேட வேண்டும். இல்லையேல், அவர்களுக்கும் அவர்களது புதிய கூட்டாளிகளுக்கும் தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்,ஒன்றிணைவோம் வா, தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தித் திணிப்பை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக…
— M.K.Stalin (@mkstalin) July 5, 2025