2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை.!
தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் மோடி அங்கிருந்து தனி விமானம் மூலம் இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி வருகிறார்

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 26, 2025) தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் மோடி அங்கிருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி வருகிறார்.
அங்கு விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மோடி திறந்து வைக்கிறார். மேலும், நாளை நாளை கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்று, ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தையும் மோடி வெளியிடுகிறார்.
இந்தத் திட்டங்கள் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிரதமர் தூத்துக்குடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவும் உள்ளார். தூத்துக்குடிக்கு வருவதை ஒட்டி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் 2,100 போலீசார், மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜூலை 26: தூத்துக்குடியில் ரூ.4,800 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்தைத் திறத்தல்.
ஜூலை 27: அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பு மற்றும் அவரது நினைவு நாணயத்தை வெளியிடுதல். இந்த விழா, சோழப் பேரரசின் மாமன்னர் ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது, அவர் திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல தலைவர்களைச் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வருகையை ஓட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் தூத்துக்குடி மற்றும் அரியலூர் பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த இரண்டு மாவட்டங்களில் ட்ரான்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.