தமிழ்நாடு

குண்டர் சட்டத்தில் விவசாயிகள் கைது… அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்க செய்யாறு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில், அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ‘செய்யாறு சிப்காட் 3-வது அலகு’ விரிவாக்கத் திட்டத்துக்காக சுமார் 3,000 ஏக்கர் விளை நிலங்கள் பறிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி பல்வேறு கிராம விவசாயிகள் ஒன்றுகூடி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

கடந்த 2-ம் தேதி விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது, சிப்காட் விரிவாக்கத் திட்டத்தையே கைவிட வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தங்கள் அடையாள ஆவணங்களை  வருவாய்க் கோட்டாட்சியரிடம் ஒப்படைப்பதற்காக ஊர்வலமாகச் சென்றனர். அப்போது ஊர்வலத்தை  தடுத்த போலீஸார், விவசாயிகளைக் கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துவைத்தனர்.

பின்னர் விவசாயிகள் மண்டபத்தைவிட்டு வெளியேற மறுத்து உள்ளிருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது செய்யாறு போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். அதுமட்டுமில்லாமல், போராட்டத்தை முன்னின்று நடத்திய அருள் என்பவர் உட்பட 20க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸார் கைது செய்து, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்திருந்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களில் அருள், பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகிய 7 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நடவடிக்கை எடுத்திருக்கிறார் என தெரியவந்தது. இவர்கள் 7 பேருமே சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகளாகக் கருதப்படுவதால், போராட்டத்தை ஒடுக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, விவசாயிகள் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை எடுக்கப்பட்டதுக்கு எதிராகக் கடும் எதிர்ப்புகள் மற்றும் கண்டங்களை  அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை:

தமிழகம் முழுவதுமே தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசு, அமைதியாகப் போராடும் திருவண்ணாமலை விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பதை பார்த்தால், இதற்கு மேலும் திமுக அரசால் தரம் தாழ்ந்து போக முடியாது என்ற எங்கள் எண்ணத்தைத் தவறென நிரூபித்துள்ளனர் என கடுமையாக சாடியுள்ளார். மேலும், செய்யாறு விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலையில் நாளை பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:

எனது தலைமையிலான கழக அரசு பல்லாயிரக்கணக்கான போராட்டங்களை சந்தித்திருக்கிறது. இல்லாத காரணங்களையெல்லாம் சொல்லி திமுக பல அமைப்புகளைத் தூண்டிவிட்ட போதிலும், அந்தப் போராட்டங்களுக்கெல்லாம் கழக அரசு அனுமதி வழங்கி, காவல் துறை பாதுகாப்பையும் வழங்கியது. நியாயமான காரணங்கள் இருந்தபட்சத்தில் அவைகளை கழக அரசு நிறைவேற்றியும் தந்திருக்கிறது. விவசாயிகளின் போராட்டத்தைத் தடுப்பதற்கு துப்பில்லாத இந்த திமுக அரசு, காவல் துறையை தன்னுடைய ஏவல் துறையாக பயன்படுத்துவதை மட்டும் கனக் கச்சிதமாக செய்துகொண்டு வருகிறது.

தங்கள் விவசாய நிலங்கள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் வேளாண் பெருங்குடி மக்கள் நியாயமான அகிம்சை வழியில் போராடி வருவதை ஒடுக்குவதற்கும், திமுக அரசு காவல் துறையை தொடர்ந்து பயன்படுத்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, செய்யாறு தொகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறப் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி விவசாயிகள் 7 பேர் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை உடனடியாக திரும்ப பெற விடியா திமுக அரசுக்கு வலியுறுத்துகிறேன்.

இல்லையெனில், விவசாயிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன் என்றுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க பணிகளுக்காக விளை நிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை திரும்ப பெற்று, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளையும் உடனடியாக விடுதலை செய்வதோடு, சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க முடிவை கைவிட வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:

விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த சில மாதங்களாக அறப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அந்த அறப் போராட்டத்தை அடக்கும் விதமாக விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின்மீது தி.மு.க. அரசு வழக்கு தொடுத்து, அவர்களை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்றும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் திமுக அரசை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

3 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

3 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

5 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

6 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

6 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

6 hours ago