Periyar Statue: பெரியார் சிலை அவமதிப்பு.. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்க – பாமக நிறுவனர் ராமதாஸ்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூரில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைந்துள்ளது. இந்த சமத்துவபுரம் நுழைவு வாயிலில் மார்பளவு கொண்ட பெரியார் சிலை வைக்கப்பட்டு உள்ளது. கம்பி வேலி அமைத்து பாதுகாப்புடன் இருந்த பெரியார் சிலை மீது இன்று காலை யாரோ மாட்டு சாணத்தை வீசி அவமதிப்பு செய்து இருந்தனர். இதை அறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பின்னர் சிலையின் மீது வீசப்பட்டு இருந்த சாணத்தை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்தனர். பெரியார் சிலை அவமதிப்புக்கு அரசியல் தலைவர்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், கோவை அருகே தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவரது எக்ஸ் தள பதிவில், கோவை மாவட்டம் வடசித்தூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் மார்பளவு சிலை மீது சிலர் மாட்டுச் சாணத்தைப் பூசி அவமதிப்பு செய்துள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், மக்களுக்கு சுயமரியாதை உணர்வை ஏற்படுத்தவும் போராடிய தலைவரின் சிலையை இவ்வாறு அவமதிப்பது கண்டிக்கத்தக்கது.
பொது அமைதியையும், சட்டம் – ஒழுங்கையும் சீர்குலைக்கும் நோக்கத்துடன் இது செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும். இதற்கு காரணமானவர்களையும், அவர்களின் பின்னணியில் இருப்பவர்களையும் கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.