வீடுதேடி காய்கறிகள் விற்பனை.. அனைத்து ரேஷன் கடைகளிலும் தக்காளி – முதலமைச்சர் அறிவுறுத்தல்!

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை.
தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, உணவுத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய முதலமைச்சர், சென்னையில் சில்லறை விற்பனையில் தக்காளி விலை கிலோ 130 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. இதுபோன்று இஞ்சி, சின்ன வெங்காயம், பருப்பு வகைகளின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே, நியாயவிலை கடைகள், உழவர் சந்தைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனையை அதிகரிக்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள உழவர் சந்தைகளை அதிகப்படுத்த வேண்டும். உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகரிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து நியாயவிலை கடைகளிலும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல்களை மேற்கொள்ளலாம். அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதை கடுமையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறிகள் விலை உயர்ந்தாலும் அதன் பலன் விவசாயிகளுக்கு நேரடியாக செல்லவில்லை. விவசாயிகளுக்கு நேரடியாக பலன் சென்று சேர வேளாண்துறை தனி கவனம் செலுத்த வேண்டும். நடமாடும் காய்கறி கடைகளை தொடங்க வேண்டும். கொரோனா காலத்தை போல வீடுதேடி காய்கறிகளை விற்பனை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதாவது, நடமாடும் காய்கறி கடைகளை மாநகராட்சி மற்றும் தோட்டக்கலை மூலம் தொடங்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் நியாயவிலை கடைகள், அமுதம் அங்காடிகளில் குறைத்த விலையில் பருப்பு வகைகளை விற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்!
July 6, 2025