கலைஞர் நூற்றாண்டு விழா இன்று தொடக்கம்..! திமுக சார்பில் பிரமாண்ட ஏற்பாடுகள்..!

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் இன்று தொடக்கம்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் திமுக சார்பில் கலைஞரின் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இன்று 100வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், ஒரு வருடம் முழுவதும் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதலவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலில் கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்த உள்ளார். இன்று மாலை வடசென்னையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
மேலும், கலைஞரின் நூற்றாண்டு விழாவினையொட்டி, “ஊர்கள் தோறும் திமுக” எனும் தலைப்பில், கிளைக் கழகங்களில் அமைந்துள்ள திமுக பழைய கொடிக் கம்பங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. திமுக மாவட்டங்கள் தோறும் அரசின் விதிகள் மற்றும் அனுமதியை பெற்று, “எங்கெங்கும் கலைஞர்” என்ற அடிப்படையில், கலைஞரின் முழு உருவச் சிலை, மார்பளவு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று திமுக சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.