மிட்செல் மார்ஷ் மிரட்டல் சதம்.! ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.!
AUSvsBAN: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 43-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதியது. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது,
இதனால் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பங்களாதேஷ் அணி வீரர்கள், சிறப்பாக விளையாடி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் எடுத்தனர். இதில் டவ்ஹித் ஹ்ரிடோய் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். ஆஸ்திரேலியா அணியில் சீன் அபோட், ஆடம் ஜம்பா இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இதனை அடுத்து 307 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்ய களத்தில் நுழைந்தது. இதில் முதலில் டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். இதில் டிராவிஸ் ஹெட், தஸ்கின் அகமது வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக மிட்செல் மார்ஷ் களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க ஆரம்பித்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 37 ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்து, அவரது 19 ஆவது ஒரு நாள் அரை சதத்தை அடித்தார். இதற்கிடையில் பொறுப்பாக விளையாடிய டேவிட் வார்னர் ஆறு பவுண்டரிகளை அடித்து அரைசதம் கடந்து, முஸ்தபிஸூர் வீசிய பந்தில் சாந்தோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரை அடுத்து ஸ்டீவன் ஸ்மித் களமிறங்கி ஸ்கோரை உயர்த்தினார்.
இதன் பிறகு நசீம் அஹமத் வீசிய ஓவரில், மிட்செல் மார்ஷ் சதம் அடித்து விலாசினார். தொடர்ந்து ஆட்டம் விறுவிறுப்பாக செல்ல ஒருபுறம் மிட்செல் மார்ஷ் 150 ரகளை கடந்தார். மறுபுறம் ஸ்டீவன் ஸ்மித் 3 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர்களை அடித்து 51 ரன்களை எடுத்தார். இறுதியில் 35 பந்துகளுக்கு 6 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், மிட்செல் மற்றும் ஸ்மித் இருவரும் இணைந்து வெற்றி இலக்கை எட்டச்செய்தனர்.
முடிவில் 44.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஆஸ்திரேலியா, 307 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வென்றது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 17 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் என பறக்கவிட்டு 177* ரன்களையும், ஸ்டீவன் ஸ்மித் 63* ரன்களையும், டேவிட் வார்னர் 53 ரன்களையும் குவித்தனர். இந்த போட்டிக்கு முன்னதாகவே பங்களாதேஷ் அணி உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.