IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், ஹைதராபாத் அணியும் ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் செயின் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தனர்.
இப்போட்டியில் அதிகபட்சமாக தொடக்கவீரர் டிராவிஸ் ஹெட் 58 ரன்களும், நிதிஷ் ரெட்டி 76* ரன்களும், கிளாசன் 42* ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் அணியில் அவேஷ் கான் 2 விக்கெட்டையும், சந்திப் சர்மா ஒரு விக்கெட்டையும் பறித்தனர்.
202 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், பட்லர் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய இரண்டாவது பந்திலே பட்லர் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் அதே ஓவரில் ஐந்தாவது பந்தில் போல்டாகி வெளியேறினார்.
பின்னர் ரியான் பராக், ஜெய்ஸ்வால் இருவரும் கூட்டணி அமைத்து ரன்களை சற்று நிதானமாக விளையாடி உயர்த்தி வந்தனர். இதற்கிடையில் இருவரும் அரைசதம் விளாசினர். இவர்களின் விக்கெட்டை பறிக்க ஹைதராபாத் அணி திணறியது. இந்த நிலையில் தான் 14-வது ஓவரை நடராஜன் வீசினார். அந்த ஓவரில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் நடராஜன் வீசிய பந்தை back side அடிக்க முயன்றபோது போல்ட் ஆகி 67 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
அடுத்து ஹெட்மியர் களமிறங்கினார். 16-வது ஓவரை பாட் கம்மின்ஸ் வீச அந்த ஓவரில் சிறப்பாக விளையாடி வந்த ரியான் பராக் சிக்ஸர் அடிக்க முயன்றபோது மார்கோ ஜான்சனிடம் கேட்சை கொடுத்து 77 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஹெட்மியர் வந்த வேகத்தில் 13 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்க அடுத்து வந்த துருவ் ஜூரல் 1 ரன் எடுத்து நடையை கட்டினார்.
இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டையும், பாட் கம்மின்ஸ், நடராஜன் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.
ராஜஸ்தான் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 8 போட்டியில் வெற்றியும், 2 போட்டியில் தோல்வியும் தழுவி 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் ஹைதராபாத் அணி 10 போட்டியில் விளையாடி 6 போட்டியில் வெற்றியும், 4 போட்டியில் தோல்வியும் தழுவி 12 புள்ளிகள் பெற்று உள்ளது.