ODI rankings: முதல் இடத்துக்கு கடும் போட்டி… ஐசிசி ஆடவர் ஒருநாள் அணி தரவரிசை பட்டியல் வெளியீடு!

ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில், ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். தென்னாபிரிக்கா வீரர் வாண்டர்சன் மூன்றாவது இடமும், டேவிட் வார்னர் நான்காவது இடமும், விராட் கோலி 8வது இடமும், ரோஹித் சர்மா 9வது இடமும் பிடித்துள்ளனர்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட் முதலித்தில் தொடர்கிறார். இந்திய அணியின் முகமது சிராஜ் 9வது இடத்தில் உள்ளார். இந்த தரவரிசை பட்டியல் நிரந்தரமில்லை, தற்போது பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருவதால் மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஐசிசி ஆடவர் ஒருநாள் அணிக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்பு நம்பர்-1 ஒருநாள் அணி யார் என்று தரவரிசை பட்டியலில் கடும் போட்டி நிலவி வருகிறது. இருப்பினும், ODI தரவரிசையில் ஆஸ்திரேலியா அணி இன்னும் முன்னணியில் இருந்தாலும், இன்றைய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர்களுக்கு எதிராக முடிவுகள் வந்தால் முதல் முதலிடத்தை இழக்க நேரிடும்.
அதாவது, இன்று நடைபெற்று வரும் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை தோற்கடித்து, இந்தியா வங்கதேசத்தை வீழ்த்தினால், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து மூன்று வடிவங்களிலும் முதன்மை இடத்தைப் பிடிக்கும். எனவே, அக்டோபர் 5 ஆம் தேதி உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் விளையாடும் போட்டிகளைப் பார்க்கலாம்.
ஆஸ்திரேலியா: ஐசிசி ஆடவர் ஒருநாள் அணிக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா தற்போது 118 மதிப்பீடுகளுடன் (ranking) முதல் இடத்தில் உள்ளது. வரவிருக்கும் போட்டிகள்: தென்னாப்பிரிக்கா (செப்டம்பர் 15, செப்டம்பர் 17), இந்தியாவுக்கு எதிராக (செப்டம்பர் 22, செப்டம்பர் 24, செப்டம்பர் 27) ஆகும்.
ஆஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டில் ஆஸ்திரேலியாவும். ஒன்றில் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளது. நான்காவது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதனால் உலகக் கோப்பையின் தொடக்கத்தில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக ஆஸ்திரேலிய அணி உள்ளது.
மீதமுள்ள போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால், தொடரை வெல்ல உதவும், ஆனால் அதற்கு நேர்மாறாக தோல்விகளை சந்தித்தால், உலகக் கோப்பைக்கு முன் நம்பர் 1 தரவரிசையில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். இம்மாத இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மூலம், உலகக் கோப்பைக்கு முன்பு யார் முதல் இடத்தைப் பிடித்துள்ளார் என்பது தெரிந்துவிடும்.
இந்தியா: ஐசிசி ஆடவர் ஒருநாள் அணிக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா தற்போது 116 மதிப்பீடுகளுடன் (ranking) இரண்டாவது இடத்தில் உள்ளது. வரவிருக்கும் போட்டிகள்: பங்களாதேஷ் (செப்டம்பர் 15), ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி (செப்டம்பர் 17), ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (செப்டம்பர் 22, செப்டம்பர் 24, செப்டம்பர் 27) ஆகும்.
நம்பர்.1 தரவரிசையில் முதல் மூன்று போட்டியாளர்களை விட அதிக ஒருநாள் போட்டிகளை இந்தியா விளையாடுகிறது. இன்றைய போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்தும், செஞ்சூரியனில் ஆஸ்திரேலியாவை தென்னாப்பிரிக்கா தோற்கடிப்பதன் மூலமும் நம்பர் 1 இடத்தை அடைய முடியும்.
பாகிஸ்தான்: ஐசிசி ஆடவர் ஒருநாள் அணிக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா தற்போது 115 மதிப்பீடுகளுடன் (ranking) மூன்றாவது இடத்தில் உள்ளது. வரவிருக்கும் போட்டிகள்: உலகக் கோப்பைக்கு முந்தைய போட்டிகள் இல்லை. ஆசியக் கோப்பையின் இறுதி சூப்பர் 4 போட்டியில் இலங்கையிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்ததால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனால் உலகக் கோப்பையின் தொடக்கத்தில் நம்பர் 1 தரவரிசையைப் பெறுவதற்கான வாய்ப்பு இழந்தது. ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் தொடர்ந்து தோல்வியடைந்தால், பாகிஸ்தான் தரவரிசையில் முதலிடத்தை மீண்டும் பெறலாம். ஆனால், இந்த இரு அணிகளும் மாத இறுதியில் ஒருவருக்கொருவர் விளையாட திட்டமிடப்பட்டிருப்பதால், அவர்களில் ஒருவர் மீண்டும் முதல் இடத்தைப் பெறுவார்கள். எனவே, உலகக்கோப்பை தொடருக்கு முன்பு ஒருநாள் தரவரிசையில் யார் முதலிடம் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.