எனக்கு பங்கு இல்லை..! 48 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் – அண்ணாமலைக்கு கனிமொழி நோட்டீஸ்!

கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகாருக்கு கனிமொழி எம்பி விளக்கம்.
திமுகவினரின் சொத்துப்பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட விவகாரத்தில் கலைஞர் டிவியில் ரூ.800 கோடிக்கு சொத்து இருப்பதாக அண்ணாமலை வெளியிட்ட தகவலுக்கு கனிமொழி மறுப்பு தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், கலைஞர் டிவியில் தனக்கு பங்கு இல்லை என கனிமொழி மறுப்பு தெரிவித்து, அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அவதூறு தொடர்பாக அண்ணாமலை மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர முகாந்திரம் உள்ளது. அவதூறு தொடர்பாக 48 மணிநேரத்தில் தன்னிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், அவதூறு வீடியோவை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும். அவதூறு பரப்பியதற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக சார்பில் ஆர்எஸ் பாரதியை தொடர்ந்து, தற்போது அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கனிமொழியும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திமுகவினரின் சொத்து பட்டியலை கடந்த 14-ம் தேதி அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இதில், கலைஞர் டிவியில் கனிமொழி பங்குதாரராக உள்ளார் என தகவல் தெரிவித்திருந்தார். ஆதாரம் இல்லாமல் சொத்து பட்டியலை வெளியிட்டதாக திமுகவினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.