நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?
ஆயுஷ் மாத்ரே முதல் மயங்க் அகர்வால் வரை இந்த சீசனில் அணி மாற்றங்கள் மற்றும் மாற்று வீரர்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து மீண்டும் ஐபிஎல் போட்டி மே 17-ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே, சொந்த ஊருக்கு சென்ற வீரர்கள் அனைவரும் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அணிக்கு திரும்பி வருகிறார்கள்.
இந்த சுழலில், இந்த சீசனில் காயங்கள் மற்றும் பிற காரணங்களால் பல அணிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் களமிறங்க மறுத்த நிலையில், ஐபிஎல் நிர்வாகம் தற்காலிக மாற்று வீரர்களை அனுமதித்தது. எனவே, அப்படி எந்தெந்த அணிகளில் எந்தெந்த வீரர்களுக்கு பதிலாக எந்த வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
- ருதுராஜ் கெய்க்வாட் (காயம்) – ஆயுஷ் மாத்ரே: சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், முழங்கை எலும்பு முறிவு காரணமாக சீசனில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக 17 வயதான மும்பை இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே 30 லட்ச ரூபாய் அடிப்படை விலையில் எடுக்கப்பட்டுள்ளார்.
- குர்ஜப்னீத் சிங் (காயம்) – டெவால்ட் ப்ரெவிஸ்: குர்ஜப்னீத் சிங்கின் காயத்தால், தென்னாப்பிரிக்க இளம் வீரர் டெவால்ட் ப்ரெவிஸ் அணியில் சேர்க்கப்பட்டார்.
- வன்ஷ் பேடி (காயம்) – உர்வில் படேல்: வன்ஷ் பேடியின் காயத்திற்கு பதிலாக, இந்தியாவின் வேகமான டி20 சதம் அடித்த உர்வில் படேல் இணைக்கப்பட்டார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
- தேவ்தத் படிக்கல் (காயம்) – மயங்க் அகர்வால்: ஆர்சிபி அணியின் முக்கிய வீரர் தேவ்தத் படிக்கல், வலது தொடை தசை காயம் காரணமாக சீசனில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக, கர்நாடகாவைச் சேர்ந்த மயங்க் அகர்வால் 1 கோடி ரூபாய் விலையில் மீண்டும் ஆர்சிபி அணியில் இணைந்தார். மயங்க், 127 ஐபிஎல் போட்டிகளில் 2661 ரன்கள் எடுத்தவர், இதில் ஒரு சதமும் 13 அரைசதங்களும் அடங்கும்.
பிற அணிகளில் முக்கிய மாற்றங்கள்
- குஜராத் டைட்டன்ஸ் : க்ளென் பிலிப்ஸின் காயத்திற்கு பதிலாக தசுன் ஷனாகா 75 லட்ச ரூபாய்க்கு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : உம்ரான் மாலிக்கிற்கு பதிலாக செட்டன் சாகரியா இணைந்தார்.
- மும்பை இந்தியன்ஸ் : அல்லா கசன்ஃபர் மற்றும் லிசாட் வில்லியம்ஸுக்கு பதிலாக முஜீப் உர் ரஹ்மான் மற்றும் கார்பின் போஷ் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- ராஜஸ்தான் ராயல்ஸ் : நிதிஷ் ராணாவிற்கு பதிலாக 19 வயது தென்னாப்பிரிக்க வீரர் லுவான்-ட்ரே ப்ரெட்டோரியஸ் மற்றும் சந்தீப் ஷர்மாவிற்கு பதிலாக நான்ட்ரே பர்கர் இணைந்தனர்.
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : ஆடம் ஸம்பாவிற்கு பதிலாக ஸ்மரன் ரவிச்சந்திரன் மற்றும் ப்ரைடன் கார்ஸுக்கு பதிலாக வியான் முல்டர் இணைந்தனர்.
- டெல்லி கேபிடல்ஸ் : ஹாரி ப்ரூக்கிற்கு பதிலாக செடிகுல்லா அட்டல் இணைந்தார்.
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் : மொஹ்சின் கானுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் இணைந்தார்.
- பஞ்சாப் கிங்ஸ் : க்ளென் மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக மிட்செல் ஓவன் இணைந்தார்.
காயங்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களின் விலகல் காரணமாக மொத்தம் 17 வீரர்கள் மாற்றப்பட்டுள்ளனர், இதில் கடந்த 8 நாட்களில் மட்டும் 8 மாற்றங்கள் நடந்துள்ளன. மேலும், இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளேஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டன, ஆனால் இரண்டு அணிகளும் மீதமிருக்கும் போட்டிகளை இளம் வீரர்களை விளையாட வைத்து அடுத்த சீசனில் யாரை தேர்வு செய்து விளையாட வைக்கலாம் என்கிற முயற்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.