“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!
கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் அமைச்சர் விஜய் ஷா பொறுப்புடன் பேச வேண்டும் என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய் ஷா, நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை, அவர்களின் சகோதரியை வைத்து பிரதமர் மோடி ஒழித்துவிட்டதாக அமைச்சர் விஜய் ஷா கூறியிருந்தார்.
இதையடுத்து, கர்னல் சோபியா இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை பயங்கரவாதிகளின் சகோதரி என சித்தரிக்கும் வகையில் அமைச்சர் பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் மன்னிப்பு கேட்டார்.
இதனை தொடர்ந்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக அமைச்சர் விஜய் ஷாவின் கருத்துக்கு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், அமைச்சருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய காவல்துறைக்கு நேற்றைய தினம் உத்தரவிட்டது.
இந்த மோசமான பேச்சுக்காக அவர் மீது வழக்கு பதிவு செய்ய மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து உத்தரவிட்ட நிலையில், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த விவகாரத்தில், ம.பி. பாஜக அமைச்சர் விஜய் ஷாவைஉச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. ”அமைச்சராக இருப்பவர் பொறுப்பற்ற முறையில் கருத்து கூறுவதாக கூறிய நீதிபதிகள், அவர் மீதான எப்.ஐ.ஆர் -க்கு தடை விதிக்கவும்” மறுத்துவிட்டனர்.
மேலும், எப்.ஐ.ஆரில் முழுமையான விவரங்கள் இல்லை எனவும் அதிருப்தி தெரிவித்து வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர். இவ்வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தி, நாளை (மே 16) வெள்ளிக்கிழமை விசாரிக்க தலைமை நீதிபதி கவாய் மற்றும் நீதிபதி ஏ.ஜி. மாசி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.