மே 5ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கடைகள் விடுமுறை – வணிகர் சங்க தலைவர் அறிவிப்பு

மே 5-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கடைகள் விடுமுறை என வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் அறிவிப்பு.
மே 5ம் தேதி வெள்ளிக்கிழமை வணிகர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பில் உள்ள டெக்ஸ்வேலி மைதானத்தில் பந்தல் அமைக்கப்பட்டு வணிகர் உரிமை முழக்க மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை தாங்குகிறார். இதில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடைபெற உள்ள மாநாட்டில், வியாபாரிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் அன்றைய ஒருநாள் மட்டும் வணிகர்கள் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மே 5-ஆம் தேதி வணிகர் மாநாடு நடைபெறுவதால் தமிழ்நாடு முழுவதும் கடைகள் விடுமுறை என வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.