“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!
NDA கூட்டணியில் தங்களை தவிர்க்க முடியாது ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள் ஒரு பக்கம் எழுந்துள்ளது. ஏற்கனவே, பாஜக -அதிமுக கூட்டணி உறுதி என்று அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த சூழலில், “NDA கூட்டணியில் தொடர்வது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என ஓபிஎஸ் ஆதரவாளரும், எம்.எல்.ஏ.வுமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில், ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தலைமையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களுடன் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.
அது மட்டுமின்றி, இந்தக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் அணி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த கருத்துகளைப் பெறுவதற்காக, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு ஒரு கடிதம் வழங்கப்பட்டு, அவர்களின் கருத்துகள் சேகரிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ், வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இந்தக் கருத்துகளைப் பெற்றனர்.
அதனை தொடர்ந்து கூட்டம் முடிந்த பிறகு வெளியே வந்த வைத்தியலிங்கத்திடம் கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதில் அளித்த அவர் “NDA கூட்டணியில் எங்களை எப்போதும் தவிர்க்க முடியாது. நிர்வாகிகளின் கருத்துகள் கேட்கப்படுகின்றன. நாளை முடிவு எடுக்கப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்வோமா என்பதை நாளை ஓபிஎஸ் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்குவார்” எனவும் வைத்தியலிங்கம் பேசிவிட்டு சென்றார்.