“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!
பைத்தியக்காரத்தனமான செலவு மசோதா நிறைவேற்றப்பட்டால், மறுநாள் நான் புதிய கட்சியை உருவாக்குவேன் என்று டொனால்ட் டிரம்பிற்கு எலோன் மஸ்க் வெளிப்படையாக சவால் விடுத்துள்ளார்

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய கூட்டாளியாகவும் ஆலோசகராகவும் இருந்த எலோன் மஸ்க், இப்போது டிரம்பின் மசோதா மீது, கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்.
மின்சார வாகனங்களுக்கான வரிச் சலுகைகளை ரத்து செய்யும் மசோதாவை ட்ரம்ப் ஆதரித்ததால், இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. மஸ்க் இந்த மசோதாவைபைத்தியக்காரத் தனமானது மட்டுமல்ல, அழிவுக்கு வழிவகுக்கும் என்று விமர்சித்து, தனது எக்ஸ் தளத்தில் மக்களை எதிர்க்கத் தூண்டினார். இது ட்ரம்பை கோபப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம், ”எலான் மஸ்க் மிகவும் நல்லவர்தான், ஆனால், அவரிடம் நான் அதிகம் பேசியதில்லை, அவர் ஒரு அருமையான மனிதர் மற்றும் அறிவாளியும் கூட. தேர்தலின் போது எனக்காக பிரச்சாரங்கள் செய்தார். ஆனால், அவர் கொஞ்சம் வருத்தமாக இருந்தார், அது சரியல்ல என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, இன்றைய தினம், “வரலாற்றில் எந்த மனிதரையும் விட அதிக சலுகைகளை அனுபவிப்பது எலான் மஸ்க்தான். சலுகைகள் மட்டும் இல்லையென்றால் கடையை காலி செய்துவிட்டு தென்னாப்பிரிக்காவுக்கே அவர் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்” என்று காட்டமாக கூறியிருக்கிறார்.
இந்நிலையில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அதற்கு அடுத்த நாளே “அமெரிக்கன் பார்ட்டி” என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவேன் என்று மஸ்க் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக எலான் மஸ்க் தனது பதிவில், ”இப்போது ஒரு புதிய அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. மக்களைப் பற்றி அக்கறை கொண்ட ஒரு கட்சி.
இந்த பைத்தியக்காரத்தனமான செலவு மசோதா நிறைவேற்றப்பட்டால், அடுத்த நாளே அமெரிக்க கட்சி உருவாக்கப்படும் என்று எலோன் மஸ்க் கூறினார். நமது நாட்டிற்கு ஜனநாயக-குடியரசுக் கட்சி யூனிபார்ட்டி என்ற விருப்பம் தேவை, அப்போதுதான் மக்கள் உண்மையில் ஒரு குரலைக் கேட்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
If this insane spending bill passes, the America Party will be formed the next day.
Our country needs an alternative to the Democrat-Republican uniparty so that the people actually have a VOICE.
— Elon Musk (@elonmusk) June 30, 2025
மேலும், அவர் தனது மற்றொரு பதிவில், “செலவினங்களைக் குறைப்பது பற்றிப் பேசி, பின்னர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கடனை அதிகரிக்கும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் ஒவ்வொரு எம்.பி.யும் வெட்கப்பட வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.