நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!
நெட்ஃபிக்ஸ் சந்தாதாரர்களுக்கு நேரடி விண்வெளி நிகழ்ச்சிகளைக் கொண்டுவருவதற்கான முயற்சியாக நெட்ஃபிக்ஸ் மற்றும் நாசா ஒரு பெரிய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன.

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் ஆகியவை இணைந்து ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டு, ராக்கெட் ஏவுதல், விண்வெளி வீரர்களின் ஸ்பேஸ் பயணம், பூமியின் நேரலை காட்சிகளை ஒளிபரப்பவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோடைக்காலம் முதல் அனைத்து உறுப்பினர்களின் ஒரு பகுதியாக, இந்த சேவை தளத்தில் கிடைக்கும் என்று விண்வெளி நிறுவனமும், ஸ்ட்ரீமிங் தளமும் அறிவித்தன. அதன்படி, சந்தாதாரர்கள் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் கூடுதலாக எந்த கட்டணமும் இல்லாமல் நாசா+ உள்ளடக்கத்தை அணுக முடியும்.
2023 இல் தொடங்கப்பட்ட நாசா+ ஏற்கனவே நாசாவின் வலைத்தளம் மற்றும் பயன்பாடுகளில் கிடைக்கும் ஒரு இலவச, விளம்பரம் இல்லாத தளமாகும். நாசா செயலி மற்றும் நாசா.கோவ் ஆகியவற்றில் நாசா+ இலவசமாகவும் விளம்பரங்கள் இல்லாமலும் இருக்கும். ஆனால், இப்போது நெட்ஃபிளிக்ஸ் உடன் கூட்டு சேர முடிவு செய்துள்ளதால் அதன் வரம்பு இன்னும் பெரியதாக இருக்கும்.
நாசாவின் விநியோகஸ்தர்களில் நெட்ஃபிளிக்ஸ் சேர்க்கப்படுவது யூடியூப் போன்ற பிற தளங்களில் நேரடி ஒளிபரப்புகளின் கிடைக்கும் தன்மையைப் பாதிக்காது. மேலும், நாசா+ இல் எந்த விளைவையும் ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், உங்கள் Netflix தளத்தின் வாயிலாக ராக்கெட் ஏவுதல்கள், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி நடைப்பயணங்கள், பூமியின் நேரடி காட்சிகள் மற்றும் பல போன்ற நேரடி விண்வெளி நிகழ்வுகளை நீங்கள் இப்போது பார்க்க முடியும்.