‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

தமிழ்நாடு அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

DMK - Ajithkumar

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும் யாராலும் நடந்துவிடக் கூடாது என்று காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின், சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் உறுதியளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு புகாரில் கடந்த ஜூன் 28ம் தேதி அன்று விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த காவல் நிலைய மரண வழக்கை சிபிசிஐடி விசாரிக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கூறிய போதிலும், சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ”விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்பதை அறிந்ததும் நான் மிகவும் வேதனையடைந்தேன். இது யாராலும் நியாயப்படுத்தப்பட முடியாத, காரணம் சொல்லித் தப்பிக்க முடியாத செயல். இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்ட 6 காவலர்கள் உடனடியாகச் சம்பவம் நடந்த அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இத்தகைய வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகளின்படி, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. நேற்றைய தினம், 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கும் மாற்றப்பட்டது. இன்று சம்பந்தப்பட்ட மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். துணைக் கண்காணிப்பளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப்படி சட்டபூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்துக்கப்பட்டு வருகிறது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இவ்வழக்கில் சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவத்தில் காவல் துறையைச் சேர்ந்த ஐவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிடுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai